பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

23


கல்வியும் செவிவழிக் கல்வியாகத் தோன்றி வளர்ந்துள்ளது. செவிவழிக் கல்வி வளர்ந்து பலநூறு ஆண்டுகளுக்குப் பிறகே எழுதுதல் மூலம் கல்வி வளர்ந்தது.

இன்று நிலவும் கல்வி முறை, மனநிறைவைத் தரத்தக்கதாக இல்லை. நாடு தழுவிய நிலையில் ஒரே கல்விமுறை நடைமுறையில் இருக்கிறது. இது அவ்வளவு சிறப்பன்று. வாழும் நிலப் பகுதிகளுக்கு ஏற்றவாறும், அமைத்துக் கொள்ளும் வாழ்வியல் அமைப்புக்களுக்கு ஏற்றவாறும் சிறப்புக் கல்விமுறை அமையவேண்டும். உலகம்-நாடு ஆகியனவற்றைத் தழுவி வளர, வாழ பொதுக் கல்வியும் தேவை. தேர்வுக்குத் தயார் செய்யும் வினா-விடைகளை மனப்பாடம் செய்யும் கல்வி, நாட்டுக்கும் சமூகத்திற்கும் பயன்தராது.

கல்விக்குரிய இலக்கணம்

"மனிதன் எப்போது தன்னுள் இருக்கும் அளவற்ற சக்தியை உணர்ந்து இயற்கையாகச் சுய அறிவையும் புதிய பெரிய எண்ணங்களையும் அடைகின்றானோ அப்போதோ அவன் கல்வி கற்றவனாகின்றான்" என்பது கல்விக்குரிய இலக்கணம். இன்றைய கல்வி முறையில் பெரும்பாலோர் மானுடத்தின் ஆற்றலையே உணர்வதில்லை. சுயசிந்தனை, சுய அறிவு என்பது காணக் கிடைக்காத ஒன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. இன்றைய கல்வி முறையில் புதிய பெரிய எண்ணங்கள் தோன்றவும் வளரவும் வாய்ப்பில்லை! பழங் காலத்திலும் சாதி முறைகள் இருந்தன. வேறுபடு சமயங்கள் பல இருந்தன. ஆனால், நெகிழ்ந்து கொடுக்கும் இயல்புடை யனவாக அவை இருந்தன. இன்றோ கல்வி பெறும் முறை, கற்கும் முறை அனைத்திலும் வேறுபாடுகள் விரவி, சாதி முறைகள் கெட்டித் தன்மை அடைந்து வருகின்றன.

நுண்மாண் நுழைபுலமில்லா அறிஞர்கள் சமுதாய உணர்வு இல்லாத அறிஞர்கள் உருவாக்கிய தீமையே சாதி,