பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/352

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தமிழர் வீடுகளைக் கணக்கெடுத்துக்கொண்டு எத்தனை வீடுகளில் திருக்குறள் இருக்கிறதென்று கணக் கெடுத்துப் பாருங்கள். ஒவ்வொரு வீட்டிலும் நான்கு பூட்டுக்கள் இருக்கும். ஏனெனில் மனிதன் அவநம்பிக்கையில், சந்தேகத்தில் வாழ்கிறான். ஒருவனையொருவன் நம்பி வாழவில்லை. இதுதான் திருவள்ளுவர் பிறந்த நாடு என்று சொல்லுகிறோம். இந்த நாட்டில் கள்வரும் இல்லை; காவல் செய்வாரும் இல்லை என்ற நிலை இல்லை.

மதம் மனிதனிடத்து நம்பிக்கையை, அன்பு நெகிழ்ச்சியை ஊட்டுவதுதான். ஆனால் நம் நாட்டுக் கொள்கையில் பணநாயகம் பெருகியது. ஆகவே வீடுகளில் குறள் புகுவதற்குப் பதில், தேவாரம், திருவாசகம் புகுவதற்குப் பதில் பூட்டுக்கள் நுழைந்தன. பூட்டுக்களாலும் காப்பாற்ற முடியாத போது போலீஸ்காரர்களைச் சிருஷ்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நாட்டின் பண்பாடு சிதறிவிடுகின்றது. களவு காவல் பெரிய தத்துவம். மனிதன் முதலில் வந்தானா? காவற்காரன் முதலில் வந்தானா? மனித சமுதாயத்தில் காவற்காரன் முதலிலும் மனிதன் பிறகும் வந்தனர். பணக்காரன், பிறருக்குத் தேவைப்படுவதை அவன் ஒருவனே சுரண்டி வைத்திருக்கிறான். ஒரு நேரத்தில் பல ஆயிரக்கணக்கானவர்களுக்குத் தேவையானதை அவர்களே தேக்கி வைத்துக் கொள்கிறார்கள்.

அதை, வயிற்றுப் பசியால் வாடுகிறவன் பார்க்கிறான். பசி மனிதனை மிருகம் ஆக்கிவிடுகிறது. மனித சமுதாயத்தில் பசி என்றால் கோபம்வரும் என்பதைத் திருவள்ளுவர் ஒப்புக் கொள்கிறார். பசிக்கிறது என்று ஒருவன் கேட்கும்போது சாப்பிட்ட கையைக்கூட உதறாதவரைக் கையை மடக்கிக் கொண்டு குத்துகிறார் திருவள்ளுவர். குத்துகிற இடம் முகவாய்க்கட்டை

"ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கையர் அல்லா தவர்க்கு”