பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/356

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குறிப்பிடப் பெறுகிறது. அறத்துப் பாலில் மெய்யுணர்வு அதிகாரத்தில் மட்டும் ஓரளவு வற்புறுத்தப் பெறுகிறது.

"எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”

என்பது திருக்குறள். இங்கு வற்புறுத்தப் பெறும் இந்த அறிவிலும்கூட அன்பினால் விளைந்த ஞானத்தைச் சொல்லுகிறாரே தவிர அந்த ஞானத்தை மறுக்கின்ற அறிவைப் பற்றிப் பேசவில்லை. எனவே முப்பால்களிலும் வலியுறுத்தப்பெற்ற அன்பு நெறியில்தான் திருவள்ளுவருக்கு அதிக ஈடுபாடு இருந்திருக்க முடியும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கின்றது.

அடுத்து, திருக்குறள் உலக சமுதாயத்திற்காக - மக்கள் குலத்தின் வாழ்வுக்காக எழுந்தது என்ற அடிப்படைக் கருத்து எதிர்க்கட்சி நண்பர்களுக்கு உடன்பாடுடையதாக இருக்குமானால் இந்த உலக சமுதாயத்தைப் பின்னிப் பிணைத்து இணைத்து வாழ்விக்கின்ற நெறியாகத் திருவள்ளுவர் அன்பு நெறியைத்தான் மேற்கொண்டிருக்கிறார் - கையாளுகிறார் என்பதை மறுக்க மாட்டார்கள், 'அன்பின் வழியது உயிர் நிலை என்று திருவள்ளுவர் பேசுகின்றார். என்போடும் நரம் போடும் தசையோடும் நாம் இந்த உலகில் பிறந்து நடமாடுகின்ற பயன்கூட அன்பு காட்டுவதற்குத்தான் என்று திருவள்ளுவர் மிக அழகாக வலியுறுத்துகின்றார்.

"அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்பதோல் போர்த்த உடம்பு”

என்கிறார். 'நீ என்பு தோல் போர்த்த உடம்பாக இருக்கிறாய்' என்கின்றார். அறிவு இல்லாவிட்டால் நீ என்பு தோல் போர்த்த உடம்பாவாய்' என்று அவர் கூறவில்லை. அன்பினாலே உயிர்தங்கி வாழாது போனால் அது என்பு தோல் உடம்பர்கி விடுகிறது என்கின்றார். மிருகக்காட்சி