பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/366

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தோன்றுகிறது. இது வழி நிலை பயிற்சிக் கொள்ளும் நிலை, முன்னையது புலன்களின் சார்புடையது. பின்னையது பொறிகளின் சார்புடையது. முன்னையது சுதந்திரமானது. பின்னையது அஞ்சியும் செய்யலாம். ஒழுங்கு நெறி கற்றுக் கொடுக்க முற்றிலும் தகுதிப் பாடுடையவன் இயற்கையென்ற பேராசிரியன். ஆனாலும் மனிதனிடத்தில் கற்றுக் கொள்ளும் உணர்ச்சியைவிட அனுபவிக்கும் உணர்ச்சியே மேலோங்கிற்று. அவன் இயற்கையிலிருந்து பாடம் படித்துக்கொள்ளத் தவறிவிட்டான். ஆனாலும், அடக்கியாண்டு அனுபவித்துக் கொண்டு வருகிறான். எதையும் அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வு ஆசையை வளர்க்கும். அவ்வழி விரும்பத்தகாத போட்டாப் போட்டிகள் தோன்றும். ஒழுக்கம் உறுதியற்றுப் போய்விடும். ஒழுங்கு நிலை தடுமாறும்.

இயற்கையிலிருந்து ஒழுக்கத்தையும் ஒழுங்கையும் கற்றுக்கொள்ளத் தவறிவிடும் மனிதனுக்கு ஒழுங்கைக் கற்றுக் கொடுப்பது சமுதாயம். அந்த பரந்துபட்ட சமுதாயக் குடும்பம் என்ற நிலைக்களனிலிருந்து ஒழுங்கைக் கற்றுக் கொள்ளுகிறான். பாரம்பரியம் என்பது உணர்ச்சிகளின் சங்கிலி - உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு. இது எங்கோ ஒரோ வழிதான் மாறும் பெற்றோர் சமுதாயம் பெருமைக்குரியதாக அமையாத போனால் ஒழுங்குகள் மாறும். அவை உறுதிக் கொள்ள முடிவதில்லை. ஒழுங்குகள் கால்கொள்வதில்லை. அஞ்சல் தலையில் ஒட்டுதற்குரிய பசையுண்டு. எனினும் அதுவே ஒட்டுதற்குப் போதாது. அதற்குப் புறச் சேர்க்கையாகச் சிறிது தண்ணீரும் தேவை. அதுபோலத் தனி மனிதன் தன் சிந்தனையாலும் அறிவினாலும் ஒழுங்கைக் கடைப் பிடிக்க எவ்வளவுதான் முயற்சித்தாலும் அதைக் காப்பாற்றிக் கொள்ளப் பெற்றோர் சமுதாயத்தின் ஒழுக்க முறை துணை செய்யாவிட்டால் பயனில்லை. இன்றையச் சூழ்நிலையில் பள்ளிக்கூடத்திற்கும் வீட்டிற்கும் போர் நடந்து கொண்டிருக்கிறது!ஆசிரியர்களும் பெற்றோர்களும் இரு அணிகளாகப்