பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/371

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

359


மலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் படிக்கணக்கில் தேன் கிடைத்துக் கொண்டிருந்தது. இப்பொழுது தேன் கூட்டைத் தேடிப்பிடிக்க வேண்டியிருக்கிறது. எனவே, தமிழகத்தின் வளத்தில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இவ்வீழ்ச்சிக்குக் காரணம் யாதெனச் சிந்தித்தல் வேண்டும்.

குறையிருக்கும் இடத்தைக் கண்டு நிறைவு செய்தல் வேண்டும். அதுதான் இன்றைய பஞ்சத்தைப் போக்க வழி. குற்றத்தைத் தமிழ் நாவலர் திருவள்ளுவர் எடுத்துக் கூறியுள்ளார். குற்றமற்ற நிலையில் நிறைந்த விளைபொருள் களைத் தருகின்ற நிலம்கூடப் புகழ் இல்லாத உடம்பைச் சுமந்தால் பயன் குன்றும் என்று அவர் கூறுகிறார். இங்குப் புகழ் எனப் பேசப் பெறுவது இன்று பெரும்பான்மையோரால் கருதப்படும் புகழ் அல்ல. வள்ளுவனார் "பொய்யாமை யன்ன புகழில்லை” என்று பேசுகின்றார். பொய் அறியாத வாழ்க்கையே அவர் குறிப்பிடும் புகழ்.

"பொய்யறியா வாய் மொழியார் புகழ் நிறைந்த நன்மாந்தர்” என்று மதுரைக் காஞ்சி கழறுகிறது. இத்தகு மாந்தர்கள்தாம் புகழுடைச் செல்வர்கள். அவர்களே நல்லவர்கள். "எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நிலமகளும் நல்லவள்” என்றுதானே புறநானூறு கூறுகிறது. இத்தகு நலம் நிறைபுகழ்ச் செல்வர்களைத் தாங்கப் பெறாத நிலத்தின் பயன் குன்றும்.

"வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்"

என்பது வள்ளுவர் வாய்மொழி. எனவே, இன்றைய வறுமைக்குக் காரணத்தை வள்ளுவர் காட்டுகின்றார். அறமல்லாதவற்றை மக்கள் விரும்பி ஒழுகுவதனாலே வளம் குன்றும் என்று குறிஞ்சிக் கலியும் கூறுகிறது.

"சிறு குடியிரே! சிறுகுடி யிரே!!
வள்ளிகீழ் விழா வரைமிசைத் தேன்தொடர