பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/375

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

363


அறத்தின் நெறிதவறி, குற்றம் இல்லாத கோவலனைக் குற்றமுடையானெனக் கருதிக் கொலை செய்தான் பாண்டியன் நெடுஞ்செழியன். அக்கொலையால் அன்றைய தமிழகம் பன்னிரண்டாண்டுகள் கொடிய பஞ்சத்தால் அவதியுற்றது. அதுபோலவே இன்றைய மனிதன் தகாதனவற்றைச் செய்தால், அறம் பேணாது வாழ்ந்தால், வான் மழை தவறி, வளமெல்லாம் மறைய, அல்லற் படுவது இயல்பாகும். இனியாவது அரசியற் காரணம் பற்றியும், அல்லது வேறு எக்காரணம் பற்றியும் சரி, அறமல்லாதன செய்யோம் என்ற உறுதி மொழியைப் பூண்போமாக! குற்ற மெல்லாம் குணமெனக் கொள்ளும் பேரருட் பெருங் கடவுளும் பெருமழை தந்து நம்மை வாழ்விப்பானாக.

16. கம்பன் வேண்டாமா?

தமிழ்நாட்டில் கம்பனுக்குக் கொஞ்சம் எதிர்ப்பு உண்டு. கம்பனை எதிர்க்கிறார்களோ, இல்லையோ, இராமனை எதிர்க்கிறார்கள். இராம காதை ஒரு சர்வ தேசியக் காதை, அது ஒரு நாடோடி வரலாறுபோல. மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் பேசப்படுகிற ஒரு தேசிய வரலாறு. ஆனால், அந்த இராம காதை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பலமாதிரியாக வழங்கப் பெறுகிறது.

காவியத்தில் வருகின்ற ஒரு காவியத் தலைவனை நாம் ஆராயும்போது, அந்தப் பாத்திரத்தின் குண தோஷங்களைக் காணவேண்டுமே தவிர அந்தப் பாத்திரம் எந்த இனத்தவராயிருந்தால் நமக்கென்ன? கம்பன் தான் எடுத்துக் கொண்ட பாத்திரங்களின் வாயிலாக என்ன சொல்ல நினைக்கிறான் என்பதைத்தான் நாம் காணவேண்டும். அந்தப் பாத்திரம் கங்கைக் கரையில் பிறந்தால் என்ன? காவிரிக் கரையில் பிறந்தால் என்ன? அதைப்பற்றி நமக்கென்ன கவலை?