பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/377

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

365


கூறினார். ஆனால் இன்றைய நிலை என்ன? புத்தகத்தில் படித்தது வாழ்க்கையில் படியவில்லை.

"உயிர்களிடத்து அன்பாயிரு - ஆசையை விட்டு ஒழி - ஆசையே துன்பங்களுக்கெல்லாம் காரணம்” என்று புத்தர்பிரான் போதித்தார். நாம் இன்று காணும் நடைமுறை? நேருக்குமாறான போர்க்கோலம். மனிதனின் உணர்வும் - பாசமும் உறவை மையமாகக் கொண்டது என்பதறிந்த மாணிக்கவாசகர், இறைவனையே "உறவே" என்று அழைக்கிறார். நமக்கு அறிமுகப்படுத்துகின்றார். அப்பரடிகளும் "அன்புடைய மாமனும் நீ - மாமியும் நீ" என்று சமுதாய உறவின் முறையில் பிணைக்கின்றார்.

இராமன் அயோத்தியை ஆண்ட மாமன்னனின் திருமகன். இடத்தாலும் இனத்தாலும் - குலத்தாலும் வேறுபட்ட அனுமனையும், குகனையும், வீடணனையும் தன் தம்பிகளாக ஏற்றுக் கொண்டமையை - இனிய தமிழில் கம்பன் விளக்குகின்றான்.

இராமன்மீது வான்மீகத்தின் வழியில் இருந்த - சில குறைகள் எனக் கருதக் கூடியவைகளையும். கம்பன் தமிழகத்திற்கேற்ப செப்பம் செய்திருக்கிறான். இன்னும் சொல்லப்போனால், கம்பன் தமிழ் நாகரிகத்தை - தமிழ்ப் பண்பை - தமிழ் மரபைக் காத்த காவலன் என்றுகூடக் கூறலாம். எனவே நமக்குக் கம்பன் வேண்டும் என்று கூறுவதில் எத்தகைய தவறுமில்லை.

நேற்று நான் செய்த ஒரு பிழை பெரிதல்ல - இன்று அது பிழை எனத் தெரிந்தபின் - பிழை திருத்தி வாழ்வதுதான் சிறப்பு. பிழை மறைந்துபோகும் - பின்னைய வாழ்வு வரலாற்றில் இடம்பெறும்.

இன்றைக்கு எண்ணுறு ஆண்டுகட்கு முன் இந்தக் கருத்தை வலியுறுத்திய கம்பன் நமக்கு வேண்டாமா?