பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/379

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

367


என்று யாருமே இல்லையாம்; ஏன்? வறுமை இருந்தால் தானே அதைத் தணிக்க வள்ளல்கள் இருக்க வேண்டும்? கொடுப்பதற்கேயுள்ள இயல்பு' என்பது இப்போது மற்றவர்களின் தலையைத் தடவத்தான் பயன்படுகின்றது.

கம்பனோ,

"வண்மை இல்லையோர் வறுமை இன்மையால்"

என்று பேசுகிறான். அந்த நாடு இப்படி இருந்ததா என்று சிலர் கேட்கலாம். அப்படி ஒரு நாடு இருந்ததோ, இல்லையோ, அத்தகைய ஒரு நாடு வேண்டும் என்று கம்பன் விரும்பினான். இப்படிப்பட்ட ஒரு சோஷலிசக் கருத்தை யார் சொல்லியிருக்கிறார்கள்? இப்படிப்பட்ட கவிஞன் நமக்கு வேண்டாமா?

அடுத்து,

"எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்த லாலே
இல்லாரும் இல்லை உடை யார்களும் இல்லை மாதோ!"

என்று பேசுகின்றான். எல்லா மனிதர்களுக்கும் வாய்ப்பிருக்க வேண்டும். (Oppurtunity for all) என்பதுதான் சோஷலிசம். இதைத்தான் "எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே" என்று குறிப்பிடுகின்றான். இன்றைக்கு எண்ணுறு ஆண்டுகட்கு முன் இத்தகையதொரு சோஷலிசக் கருத்தைச் சொன்ன கவிஞன் கம்பன் ஒருவன்தான்.

கம்பன் காணவிரும்பிய சோஷலிச நாட்டிலே - சமுதாயத்திலே சில அடிப்படைப் பண்பாட்டைக் காட்டுகின்றான். அங்கு எல்லோருமே அவரவர்களுக்குரிய நெறியோடு நின்றார்களாம். ஒன்றேயொன்று மட்டும் நெறி கடந்து சென்றதாம். அதுதான் வெள்ளம், ஆம். மனிதன் நெறிகடந்து போகவில்லை. வெள்ளம் அஃறிணைதானே!

மனிதன் என்றால் அவனுக்குக் குறிக்கோள் இருக்க வேண்டும் - வாழ்க்கைக்கு ஓர் இலட்சியம் இருக்க வேண்டும்.