பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/380

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குறிக்கோள் வேறு, தேவை வேறு. குறிக்கோளை அடையத் துணைநிற்பவனே தேவையாக இருக்கவேண்டும். பிறப்பு - இறப்பு - இவைகளின் வழி உண்டாகின்ற துன்பங்களிலிருந்து உயிர் விடுதலை பெறுதல் உயிரின் குறிக்கோள். இந்நிலை யினை அடைய உயிருக்குத் தேவை பொன்னும் பொருளும் போகமும் கலந்த வாழ்க்கை குறிக்கோள் இல்லாத வாழ்க்கை தான் நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கம்பன் காண விரும்பிய நாட்டில் குறிக்கோள் இல்லாதவர்கள் - குறிக்கோளை அழித்தவர்கள் யாருமேயில்லை. ஆம், மனிதன் குறிக்கோளோடு வாழவேண்டும் என்று கம்பன் விரும்பினான்.

"நெறி கடந்து பரந்தன நீத்தமே
குறி அழிந்தன குங்குமத் தோள்களே”

என்று பேசுகின்றான் கம்பன். பெண்கள் தமது தோள்களில் எழுதிய குங்குமக் குறிதான் அழிந்தனவாம். கம்பன் இப்படிக் கூறுவதன் மூலம் நெறிகடந்து வாழாதே - குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வாழாதே என்ற இரண்டு கருத்தையும் வலியுறுத்துகின்றான். இத்தகைய கம்பன் நமக்கு வேண்டாமா?

இன்று பெரும்பாலும் அடுத்தவன் பெறுகின்ற பதவி உயர்வுகளிலும், புகழிலும் கூட நமக்கு மனஅமைதி இருப்பதில்லை. அழுக்காறுதான் மிகுந்திருக்கக் காண்கிறோம். சாதாரணமாகப் பிறர் நன்றாக உடுப்பதையும் உண்பதையுமே கண்டு மனம் பொறாதவர்கள் மிகுந்திருக்கிறார்கள்.

"உடுப்பது உம் உண்பது உம் காணிற் பிறர்மேல் வடுக்கான வற்றாகுங் கீழே"

என்கிறார் திருவள்ளுவர். கம்பன் எத்தகைய மனப்பாங்கை விரும்புகிறான் என்று பாருங்கள்.