பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/384

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உயிர்த்தே மலர்தலை யுலகம்" என்று புறநானூறு பேசுகிறது. அதாவது அரசனுக்காக மக்கள்! ஆட்சிக்காக மக்கள் என்பதேயாம். மன்னன் உயிர் என்றும், மக்கள் உடல் என்றும் கூறினால், உயிர் தங்கியிருப்பதற்காக - உயிர் வாழ்ந்திருப்பதற்காகத்தானே உடம்பு? மன்னனுக்காக மக்கள் என்பதுதானே இதன் கருத்து? கம்பன் இந்தக் கருத்தை மாற்றுகிறான். மக்களுக்காகவே ஆட்சி என்ற கருத்தை வலியுறுத்துகின்றான். “மன்னன் உடம்பு; மக்கள் உயிர்” என்ற குடியரசு சித்தாந்தத்தை அப்போதே பாடியிருக்கிறான். குடியாட்சி என்றால் என்ன என்று தெரியாத காலத்தில் - முடியாட்சிக் காலத்தில் முடியாட்சிக் காவியத்தில் இத்தகையதொரு குடியாட்சிக்குக் கால்கோள் செய்த கம்பன் நமக்கு வேண்டாமா? இப்படிப்பட்ட கம்பனை வேண்டாமென்று சொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

கம்பன் நமக்குக் காட்டும் இராமன் காவியத்தலைவன். ஒரு மாபெருந்தலைவன். அடுத்து, இராமாயணத்தில் நூற்றுக்கு நூறு குறைவில்லாத நிறைவுடைய ஒரு பாத்திரம் கும்பகர்ணன்; அவன் வீரத்தில் சிறந்தவன். உடன் பிறந்தான் பாசத்தில் சிறந்தவன்; நன்றியறிதல் உடையவன்.

எவ்வளவு நல்லவனாக - பக்திமானாக - படித்தவனாக இருந்தாலும் சமுதாய நீதியின் மீது - சமுதாய ஒழுக்கத்தின் மீது மோதினால் அறம் அவனைச் சும்மா விடாது; கடவுள் அவனைச் சும்மா விடமாட்டார். இராவணன் நல்லவன், வல்லவன் - சிறந்த சிவபக்தன் - சாத்திரப் பேரறிஞன். எனினும் அவன் ஒருவனும் ஒருத்தியும் கூடி அமைதியாக வாழும் - இல்வாழ்க்கையின் மீது தன்னல வெறியோடு மோதினான். இராவணின் செய்கை நியதியல்ல; நீதியுமல்ல என்று கும்பகர்ணன் எடுத்துக் காட்ட தவறினான் இல்லை. அதே சமயத்தில் மாற்றானிடமிருந்து தன் உடன்பிறந்தானைக் காக்க - செஞ்சோற்றுக்கடன் கழிக்க - நன்றியுணர்வைக் காட்ட இராமனோடு போர் புரிகிறான்.