பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/389

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

377


பனிரெண்டு மணிக்குக் காணும் வெப்பம் போன்றவை. காந்தியடிகளின் புரட்சி இளவெயில் போல, பொதிகை மலைத் தென்றல் போல, என்றாலும் அவருடைய புரட்சி வலிமையும் - உறுதியுமுடையதாக விளங்கியது.

காந்தியடிகள் தலைசிறந்த ஞானி. அறியாமை கலப் பில்லாத தூய அறிவிற்குத்தான் ஞானம் என்று பெயர். அது பேரொளியணையது.

காந்தியடிகள் பழைய பண்புகளுக்கும் நிகழவிருக்கும் புதுமைப் பண்பிற்கும் ஒர் இணைப்புப் பாலத்தை ஏற்படுத்தினார். கங்கையும் யமுனையும் கலப்பதுபோல பழமைக்கும் - புதுமைக்கும் இடையே வேறுபாடு தெரியாத விழுமிய ஒற்றுமையை உருவாக்கினர். புதியதொரு சமுதாயத்தை உண்டாக்கினார்.

நம்மிடையே எப்படியோ ஒரு தனிமை உணர்ச்சி வளர்ந்து இருந்தது. அதன் காரணமாகப் பழக்கவழக்கங்களில் நாம் கூனிக்குறுகி வாழ்ந்தோம். அந்தக் கூனல் அந்நியர்கள் ஏறி உட்கார்ந்து சவாரி செய்வதற்கு வசதியாக இருந்தது. காந்தியடிகள் நமது கூனை நிமிர்த்தினார். கத்தியை எடுத்துக் கொடுக்காமல் - இரத்தம் சிந்தும்படி செய்யாமல் நமது கூனை நிமிர்த்தினார். அதுவரை சுகமாக உட்கார்ந்து சவாரி செய்தவர்கள் சவாரி செய்ய முடியவில்லை - இறங்கி விட்டார்கள். இந்த அதிசயத்தைக் காந்தியடிகள் செய்து முடித்தார்.

எதையும் எப்படியும் செய்யலாம். என்று காந்தியடிகள் கருதியதில்லை. வாழ்க்கையின் இலட்சியம் உயர்ந்ததாக இருக்க வேண்டும். அந்த இலட்சியத்தை அடையும் வழி முறையும் உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்பது காந்தியடிகளின் விழுமிய கொள்கை.

கு.XV.25