பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

27



கல்வியின் பயன்

காப்பியத்துறையில் கம்பன் ஒரு திருப்பு மையத்தைக் காட்டுகிறான்! அது என்ன திருப்பு மையம்? கம்பனுக்கு முன் வாழ்ந்தவர்கள் வெற்றிகளை அரசனுக்கு ஆக்கினார்கள். புராண ஆசிரியர்கள் வெற்றிகளைக் கடவுளுக்கும் தேவர்களுக்கும் ஆக்கினார்கள்! ஆனால், கம்பன், வெற்றியை மானுடத்திற்கு ஆக்கினான்! "மானுடம் வென்றதம்மா!” என்று பாடினான்! ஆம்! மானுடம் வெற்றிக்குரியது! கல்வித் துறைகள் பலப்பலவாக இருக்கலாம். ஆனாலும் கல்வியின் நோக்கம் ஒன்றே! அதாவது கல்வியின் நோக்கம் மனிதனை உருவாக்குவதேயாம்! கல்வியின் விழுமிய பயன் சிந்தையில் தெளிவு, அறிவு; ஆற்றல்; மனிதப் பேராற்றல்; நன்னெறியில் நின்றொழுகுதல் ஆகியன கல்வியின் பயன். நாகரிகத்தைக் கற்றுத் தருவதும் கல்வியாகும். கல்வி என்பது வாழ்க்கை முழுதும் தொடர்ந்து கற்க வேண்டியது. ஏன்? கல்வி நிறுவனங்கள் எப்படிக் கற்பது என்ற கற்கும் முறையைக் கற்றுக் கொடுப்பனவே தவிர, கல்வியைக் கற்றுத் தருவன அல்ல. கல்வியைக் கற்றுத் தரவும் இயலாது. வாழ்நாள் முழுதும் கற்கவேண்டும். தொடர்ந்து கற்கவேண்டும். தொடர்ந்து கற்றாலும் கல்வியில் மட்டும் முற்றுப்புள்ளி இடல் இயலாது. எப்போதும் கவனம் கல்வியின்பால் இருக்கவேண்டும்.

கல்வி, இருளகற்றும்-அறியாமையை அகற்றும் - கைவிளக்கு. கற்ற அறிவுடைமை என்றார்கள். அறியாமை என்றால் என்ன? பலர் நினைப்பது போல அறியாமை என்பது "ஒன்றும் தெரியாமை"யன்று. அறியாமை என்பது ஒன்றைப் பிறிதொன்றாக மாறுபட அறிதலும், உணர்தலுமேயாகும். அதாவது, நிலையானவற்றை நிலையல்லாதன என்றும், நிலையல்லாதனவற்றை நிலையாயின என்றும், நன்மையைத் தீமை என்றும், தீமையை நன்மை என்றும் அறமல்லாதனவற்றை அறமென்றும் முறைபிறழ உணர்தலே அறியாமை. திருக்குறள் அறிவைக் கருவியென்று