பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/398

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

386

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சண்டையிடுவான் - போர் தொடுப்பான். உள்ள வலிமையுடன் அகிம்சையைப் பேணுவதால் அவன் அடையும் பயன் மிகப் பெரியது. அகிம்சை நெறியில் நிற்பவனிடம் அறிவு, பெருமை, ஆற்றல் இவை வளரும்.

அகிம்சை நெறியாளன் மேற்கொள்ளத்தக்க நெறிகளுள் முதலாவது அவன் சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது நல்லது என்பதாகும். அதன் மூலம் அவன் பெரும் பகுதி நன்மையைப் பெறலாம் - சமாதானத்தை நிலைநாட்டலாம்.

அவன் பின்பற்ற வேண்டிய இரண்டாவது நெறி தன் ஆத்திரத்தைக் குறைத்துக் கொள்ளுதல். மற்றவன்மீது தான் கொண்டிருக்கும் ஆத்திரத்தைக் குறைப்பதற்கு ஒரே வழிதான் உண்டு. அது தன் கருத்துக்கு மாறுபட்டவனிடம் - மாற்றுக் கருத்துடையவனிடம் யோசனை கேட்பதாகும். தன் கருத்துடன் ஒத்த கருத்துடையவனிடம் பெறும் யோசனை ஆத்திரத்தைக் கிண்டிக் கிளறிவிடப் பயன்படுமே தவிர அணைக்கப் பயன்படாது. நெருப்பும் பெட்ரோலும், நெருப்பும் எண்ணெயும் ஒத்துப்போகக் கூடியன. நெருப்பை அணைக்க எண்ணெய் அல்லது பெட்ரோலின் துணையை நாடக்கூடாது; மாறாக அத்துடன் மாறுபட்ட மணல் தண்ணீர் இவற்றின் துணையை நாடவேண்டும். அது போலத் தன் ஆத்திரத்தைக் குறைத்துக்கொள்ள மாறுபட்ட கருத்துடையவனையே நெருங்கி ஆலோசனை கேட்க வேண்டும்.

அகிம்சையைப் பின்பற்ற நினைப்பவன் கொள்ளத்தக்க மூன்றாவது நெறி தற்பெருமை கொள்ளாமை ஆகும். தற்பெருமை கொள்பவனிடமும் அகிம்சை குடிகொள்வ தில்லை. மற்றவனுக்கு மதிப்பு கொடுப்பவனிடமே அகிம்சை நின்று நிலைக்கும்.