பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/405

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

393


ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அமைதல் கூடும். அத்தகையோரே ஞானிகள் மகாத்மாக்கள். மகாத்மாக்கள் நிலையில் பொதுமக்களையும் கருதுதல் கூடாது. எனவே பொது மக்களைப் பொறுத்தவரையில் இம்மை வாழ்வின் நிறைவான நிம்மதியான வாழ்வுக்குப் பின்தான் சமயம், கடவுள் நம்பிக்கை முதலியன பற்றிய சிந்தனை. ஆதலால்தான் இன்றைய மக்களிடை உலகியல் தேவையைப் பற்றிய சிந்தனை பரவியிருக்கிற அளவுக்கு சமயத்தைப்பற்றிய சிந்தனை இடம்பெறவில்லை.

எதிரான போக்கு

இந்திய நாடு மத நம்பிக்கையில் சிறந்த நாடு. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மத நம்பிக்கை அடிப்படையிலேயே வளர்ந்த நாடு. இந்து மதம் உலக மதங்கள் பலவற்றுள்ளும் கொள்கையால் சிறந்து தலைமை வகிக்கிறது. ஆனால் அதை அனுஷ்டிப்பவர்கள் எண்ணிக்கையில் சிலராயினர். இந்திய நாட்டிலும் இடையில் இந்து மதம், மக்கள் சமுதாயத்தோடு தொடர்புகொள்ளாமையினாலும், அன்றாட வாழ்வில் பங்குகொள்ளாமையின் காரணமாகவும் இந்துக்கள் பலர், தம்முடன் நெருங்கிய தொடர்பைக் கொண்ட பிற மதம் புகலாயினர். பிற மதம் புகுந்தபின் இந்து மதத்தை இழிவானதெனவும், குறுகிய நோக்கங்கள் கொண்டது எனவும் கருதலாயினர். இக் கருத்து வளர்ந்து காலப்போக்கில் இந்து மதத்திற்கு எதிர்ப்பு மனோபாவத்தை மக்களிடையே தூண்டிவிட்டது. வறுமையை ஒழித்துக்கட்டி, எல்லோருக்கும் இன்ப வாழ்வைத் தருவதே தங்களது இலட்சியம் எனச் சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சிகளும், சமூகத்தைச் சீர்திருத்துகின்றோம் என்று சொல்லிக்கொள்ளும் இயக்கங்களும் கடவுள் நம்பிக்கையை மறுக்கின்றன. மக்களினத்தின் நிரந்தரமான இன்பத்திற்குத் தடை விதிப்பது மத நம்பிக்கை தான் எனத் தீவிரமாகப் பரப்பி, மக்கள் சமுதாயத்தைச் சமயத் துறை வாழ்விற்கு எதிரிடையான பாதையிலேகு.XV.26