பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/41

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

29


உள்ளது; ஆங்கிலமொழிவழிக் கல்வியே எங்கும் ஆதிக்கம் செலுத்துகிறது. தமிழர் அறிஞராக வளராமல், தமிழ் எப்படி வளரும்? தமிழில் கற்பித்தால்தான் தமிழனின் அறிவு வளரும். நாற்பது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி இயக்கம் நடைபெற்று வந்துள்ளது. இன்றும் நடைபெற்று வருகிறது; ஆயினும் மாற்றம் இல்லை. மாற்றம் ஏற்படாதது மட்டுமல்ல. தாய்மொழிவழிக் கல்விச் சிக்கல், இன்று மொழிச் சிக்கல் நிலையிலிருந்து கைமாறி சாதிச் சிக்கலாக, சமூக-பொருளாதாரச் சிக்கலாக உருமாற்றம் பெற்றுள்ளது. துறைதோறும் தமிழ் பயிற்றுமொழியாக இடம்பெற்று விட்டால் ஆங்கிலத்தை ஒருமொழியாகக் கற்பதில் தவறில்லை.

இன்று ஆங்கிலத்திற்கு, அளவுக்கு மீறிய முக்கியத்துவம் தருவதன் காரணமாகச் சிந்தனையும் அறிவும் பாதிக்கப்படுகின்றன. சிந்தனையாற்றலையும் அறிவையும் தராத கல்வி எதற்கு? இத்தகைய பரிதாபகரமான தீமையை விலை கொடுத்து வாங்கவேண்டுமா? ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறச் செலவழிக்கும் காலமும் மூளை உழைப்பும் அதிகமானவை. அப்படிச் செலவழித்தாலும் "தேர்ச்சி" பெற முடியவில்லை. தாய்மொழியில் - தமிழில் பயின்றால் எளிதில் குறைந்த நேரத்தில், குறைந்த உழைப்பில் தேர்ச்சி பெற முடியும்! ஆதலால், எவ்வளவு விரைவில் தாய்மொழிக் கல்வி இயக்கத்திற்கு மாறுகிறோமோ அவ்வளவுக்கு நமது சந்ததியினருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது. ஆதலால், தாய்மொழியைப் போற்றுங்கள்! அவ்வழி மடமையைக் கொளுத்துங்கள்! தாய்மொழி வழி உள்ளக் கல்வியையும் உலகக் கல்வியையும் ஒருசேரக் கற்றுக் கொள்ளுங்கள்! உண்மைக் கல்வி நிறைவாகும்.

எண்ணும் எழுத்தும்

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு"

என்பது திருக்குறள்.