பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/412

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

400

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


புனலும் சூடனும் பிறவும் தேவை. எனவே, தேவையைக் கடந்து இலட்சியத்தை அடைய நாம் முயற்சிக்க வேண்டும். சமய அனுபவத்தை விட்டு விலகிய ஒதுங்கிய இலக்கியம் தமிழில் உண்டா என்பது ஐயப்பாட்டிற்குறியது. அப்பரடிகள் "நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்" என்று பேசுகின்றார். ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, இந்தச் செய்தியை உலகுக்கு அறிவித்திருந்தால், ஏழாம் நூற்றாண்டிலேயே சுதந்திர உணர்வைத் தட்டி எழுப்பிய அப்பரடிகளின் புரட்சியை அகில உலகமும் அறிந்து கொண்டிருக்குமே! பாராட்டியிருக்குமே! வாழ்க்கையைச் சுவையாகக் கருதும் பிற்போக்குச் சமய உணர்வு மிகப் பிற்காலத்தில் எழுந்ததேயாகும்.

தொல்காப்பியர் இயற்கைச் சூழலுக்கு ஏற்ப நிலத்தைப் பிரித்தார்; அந்த நிலத்தில் வளர்கின்ற மரம், செடி, கொடிகள், மனித வாழ்க்கைப் பண்புகள், விலங்கினங்கள் இவற்றை வைத்து மட்டும் அவர் நிலங்களைப் பிரிக்கவில்லை. மக்கள் வழிபடும் தெய்வமும் அந்தப் பிரிவிற்குச் சூழலாக அமைகிறது "நீலமணி மிடற்று ஒருவன்போல மன்னுக பெரும நீயே" என்று வாழ்த்துகிறார் ஒளவையார்.

இவர் ஆரோக்கியத்திற்கான மருந்துகள் சாப்பிட்டும் செத்துப் போவார்கள்; வேறு சிலர் மருந்து சாப்பிடாமலும் கூட உயிரோடிருப்பார்கள். தேவர்களுக்கு மனிதர்களைப் பற்றியே அக்கறையில்லை. அவர்கள் தாம் விரும்புவனவற்றையே செய்வார்கள்.

"தேவர் அனையர் கயவர்; அவரும்
மேவன செய்தொழுக லான்”

என்று நகைச்சுவை ததும்பப் பேசுகிறார் திருவள்ளுவர். எண்ணிச் சிந்தித்துச் செயல்படுபவர்களே மனிதர்கள்! அப்படி எண்ணிச் சிந்தித்துப் பார்க்காமல் விரும்பிய வண்ணமே செயல்படுகின்ற 'தேவர்கள்' மீது அப்பரடிகளும்