பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/416

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

404

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தேவை. அந்த ஊரில் இருக்கிற இருபது முப்பது விவசாயிகளுக்கு, ஆம் நிலமில்லாத அந்த விவசாயிகளுக்கு உழ நிலம் தேவை. உணவுக்கு நெல் தேவை இப்பொழுது எது முக்கியம் என்று பாருங்கள். இங்கு இவருக்குத் தேவை வைக்கோல்; அவர்களுக்குத் தேவை நெல் - இந்த நிலையில் தனிமனிதரான மிராசுதாரின் சொந்தப் பண்ணையை அனுமதிப்பதா? நிலமில்லாத அந்த விவசாயிகள் நிலத்தை உழ அனுமதிப்பதா? தனிமனிதருடைய மாடு கன்றுகளுக்கு வைக்கோல் தேவையிருக்கிறதே, அதைவிட இருபது முப்பது நிலமில்லாத விவசாயிகளுக்கு விவசாயம் செய்வதற்கு உழுவதற்கு நிலத்தைக் கொடுப்பதுதான் சரியானது. நியாயமானது. இம்மாதிரி ஒரு குறிப்பிட்ட கட்டம் வரும்போது தனிமனித உரிமை முதன்மையானதா சமுதாய உரிமை முதன்மையானதா என்பதுதான் பிரச்னை.

இனி, தனி மனித உரிமை முக்கியமா? முக்கியமில்லையா என்பதுகூடப் பேச்சல்ல. தனிமனித உரிமையைக் காப்பாற்றுவதற்குத்தான் சமுதாயமே தோன்றியது. எனினும் தனிமனித உரிமை எந்த அளவோடு இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு வரையறை தேவை.

தனிமனித உரிமை, தனிமனித வளர்ச்சி என்றெல்லாம் கூறுகிறார்கள். தனிமனித உரிமை வேறு - தனிமனித வளர்ச்சி வேறு. தனிமனித வளர்ச்சி பாராட்டற்குரியதுதான். ஆனால் ஒருவர் ஓராயிரம் வேலி நிலத்திற்கு மிராசுதாராக இருக்க அவரே ஏகபோகமாக அந்தப் பெருநிலத்தை வைத்து அனுபவித்துக்கொள்ள அந்தத் தனிமனித வளர்ச்சி பயன்படக்கூடாது.

தனிமனிதனுடைய வளர்ச்சி பரிணாம வளர்ச்சி இல்லாமல் சமுதாயம் நலம்பெற முடியாது. ஆனாலும் தனிமனித வளர்ச்சியால் சமுதாயத்திற்கு ஒரு தீங்கு வருகிறபொழுது நிச்சயமாக அதனை ஓர் அளவிற்குள், எல்லைக்குள் உட்படுத்தியாக வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை.