பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/419

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

407


செய்யக்கூடிய ஆசைக் களன்களே காரணமாகும். வாழ்க்கை என்பது பல்வேறு முரண்பட்ட உணர்வுகளாலும், அனுபவங்களும் ஆகிய ஒன்றேயாகும். இத்தகு வாழ்க்கை யனுபவங்களைப் பலருக்குத் தெரிவிக்கத் தோன்றிய சாதனமே எழுத்து.

வாழ்க்கை என்பது ஒரு நுண்மாண்கலை, உடல் தங்கி உலவுவோரெல்லாம் வாழ்ந்தவர்களாகி விடமாட்டார்கள். அதனாலன்றோ தமிழ்மறை "வாழ்வாங்கு வாழ்தல்" என்று பேசுகிறது.

தனிமனிதர்களுக்கும் சமுதாயத்திற்கும், தண்ணீர்க்கும் தாமரைக்கும், மண்ணுக்கும் மரத்திற்கும் இருக்கும் தொடர்பு போல இணைந்த தொடர்பு உண்டு. தனிமனித அனுபவங்களிலிருந்தே சமுதாயம் வளர்கிறது; வளம் பெறுகிறது. சமுதாயச் சூழலே தனி மனிதர்களின் அனுபவத்திற்குத் தூண்டு கோலாக இருக்கிறது. சமுதாய அரங்கில், எழுத்தாளன் மற்ற எல்லோரையும் விட பெரும் பொறுப்பைத் தாங்குகிறவனாவான். அவனுடைய அனுபவம் எவ்வளவுக்கெவ்வளவு தரமானதாகவும் தகுதியுடையதாகவும் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நாடும் உயரும். அதனாலன்றோ, சங்க காலத்துச் சான்றோனாகிய கபிலனை "புலனழுக்கற்ற அந்தணாளன்" என்று ஒரு புலவர் பாராட்டினார்.

புலமை, புலவர் என்ற சொல்வழக்குகள் புலன்களை உழுது பண்படுத்திய சான்றோர் என்பதைக் குறிப்பனவே. புலவர் என்பதை அறிவுத் தொடர்புடைய சொல்லாக மட்டுமே கருதுவதற்கிடமில்லை. அறிவோடு, அநுபவமும் நிறைந்தது என்ற விளக்கமே பொருந்தும்.

மொழியறிவும் எழுத்துத் திறனும் மட்டும் எழுத்தாளனுக்கு இருந்தால் போதா. உள்ளார்ந்த சால்பு தழுவிய அனுபவமும் தேவை. நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் நிழல்தரும் மரங்கள் வைத்து வளர்ப்பது மரபு. அம்மரத்தின் நிழல் அனுபவிப்பதற்கும், படுத்து உறங்குவதற்கும்