பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்"

என்பது அவ்வையார் வாக்கு. அதாவது கணிதமும், இலக்கியமும் கண்ணெனப் போற்றப்பெறும் என்பதாகும். இவ்விரண்டில் இலக்கியம் கற்கும் முயற்சி பரவலாகக் காணப்படுகிறது.

இந்த நூற்றாண்டுக்கு ஏற்ப அறிவியலும் கற்க வேண்டும். அறிவியலில் புதிய நூல்களையும் இலக்கியங்களில் மிகப் பழமையானவற்றையும் கற்கவேண்டும். இலக்கியங்களில் பழமையான இலக்கியங்களில் உள்ள தரம், புதிய இலக்கியங்களில் காண்பது அரிதாக உள்ளது. வாழ்க்கை இலக்குகளின் தடம்கூட இல்லாதவைகளாகப் புதிய இலக்கியங்களில் பல வந்துவிடுகின்றன. கம்பனின் இராம காதை, சேக்கிழாரின் பெரியபுராணம், இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம், திருவள்ளுவரின் திருக்குறள் இவைகளுக்கு ஒத்த புகழ்வாய்ந்த இலக்கியங்கள்! அவைகளுக்குப் பின் தோன்றவில்லையே! பாரதியும்-பாவேந்தனும் இதற்கு விதி விலக்கானவர்கள். மாணவர்கள் இலக்கியங்களை ஆர்வத்துடன் படிக்கும்படித் தூண்டவேண்டும்.

கிராமப்புறங்களில் கணிதம் கற்கும் முயற்சி போதாது. வாழ்க்கைக்குக் கணிதக் கல்வி இன்றியமையாதது. எண், எழுத்து இவ்விரண்டிலும் எண் முதன்மைப்படுத்தப்படுவதற்குக் காரணம் யாது? எண் தொடர்பான கணிதக் கல்வி, கணித அறிவு வாழ்க்கையின் இன்றியமையாத் தேவை. வாழ்க்கையை வாழுங் காலத்தை நெறிப்படுத்திக் கொள்ள, நலமுடன் வாழ, வாழ்க்கையின் மிகப்பெரிய சக்தியாக விளங்கும் பொருளியலை ஆண்டனுபவிக்கக் கணிதப் பயிற்சி தேவை. வாழ்க்கையின் அடிப்படைத் தேவை கணிதம். வாழ்க்கையில் செழிப்பும் பயன்பாடும் உளவாக்குவது எழுத்து; இலக்கியம்! ஆதலால் எண்ணை முதன்மைப்படுத்திக் கூறியது உணரத்தக்கது. அறிவியல், தொழில், நிதி ஆகிய வாழ்க்கையைத் தழுவிய பல்துறைகளையும்