பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/420

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

408

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இனிமையாக இருக்கும். எனினும், அந்த மரம் அனுபவித்து உறங்குவதற்காக வைத்து வளர்க்கப் பெற்றதல்ல; வழிப் பயணத்தில் களைப்பு ஏற்படாமல், இனிமை தழுவிய சூழலில் நடைபயிலவேயாகும். அதுபோலவே, வாழ்க்கை இலட்சியத்தை நோக்கி, நடைபோடும் மனித சமுதாயத்திற்குச் சிறந்த உணர்வுகளைத் தந்து, அவற்றின் வழி அனுபவப்படுத்த எழுத்தாளர் படைக்கும் இலக்கியங்களில் எழுத்துத் திறனும், திறனைச் சார்ந்த சுவைகளும் வாழ்க்கையில் களைப்பு ஏற்படாமல் இருப்பதற்கேயாகும். ஆனால் காலப் போக்கில் எழுத்தாளரின் அனுபவத்தைவிட எழுத்துத் திறனே மேலோங்கி நிற்கத் தலைப்பட்டு விட்டது. அது மட்டுமல்ல. யாருக்காக எழுத்துப் படைக்கப்பட்டதோ அவர்கள் படித்து அனுபவிப்பதற்கு ஏற்ற முறையில்லாமல் திறமையைக் காட்டுகின்ற முறையில் கடுந்தமிழ் நடையில் சில, இலக்கியங்கள் தோன்றின.

எழுத்தாளன் சமுதாய அரங்கில் ஒரு மிக முக்கியமான பொறுப்புள்ள இடத்தைப் பெறுகிறான். மனிதர்கள் எல்லோரும் பிறப்பால் சம நிலையுடையவர்களேயாம். எனினும், அறிவும், அனுபவமும் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.

சமுதாயப் பெரு வெள்ளத்தில் சிலர் அறிவிலும் அனுபவத்திலும் சிறந்து தலைமைக்கும் வழிபாட்டிற்கும் உரியராக விளங்குவது தவிர்க்க முடியாதது. உலகியற்கையும் கூட இந்த வரிசையில் சிறந்த எழுத்தாளர்கள் வரக்கூடும். கோடானு கோடி மக்களைத் தமது அனுபவத்தால் எழுந்த இலக்கியப் படைப்புக்களின் மூலம் நல்வழி நடத்திச் செல்லுபன் எழுத்தாளன். பள்ளத்திலிருந்து மேட்டுக்கு அழைத்துவந்து வழி நடத்திச் செல்லுபவன் எழுத்தாளன். அவன் தொழிலாளியுமல்ல - தொழில் பண்ணுபவனுமல்ல. எழுத்தாளன் பணம் சேர்க்கக்கூடாது. அவன் சமுதாயத்தின் முன்னோடித் தியாகி. அவன் காசை எதிர்பார்ப்பானாகில்,