பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/421

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

409


கருத்தைக் காசு கொடுப்பவனுக்கேற்ப மாற்றிக் கொள்வான். பொருள் படைத்தவர்களைப் புகழ்ந்து இச்சை பேசும் இலக்கியங்களைப் படைக்கத் தொடங்கி விடுவான். அவனால் ஏற்றம் பெறத்தக்க நிலையில் உள்ள கோடானு கோடி மக்களை வஞ்சித்து விடுவான். சங்க காலப் புலவர்கள் பலர் வறியவர்களாக இருந்தார்கள் என்று வரலாறும் இலக்கியங்களும் பேசுகின்றன. புலவர்களுக்கு வறுமை தொடர்புடையது என்று சிலர் ஏளனமாகவும் பலம் வருந்துதற்குரிய முறையிலும் சொல்லிக் காட்டுவார்கள். சங்ககாலப் புலவர்கள் வறியவர்கள் அல்லர். அவர்கள் விரும்பியிருந்தால் வளங்கொழிக்க வாழ்ந்திருக்க முடியும். அவர்கள் வறுமையை வலிய ஏற்றுக் கொண்டார்கள். அதனாலேயே அவர்கள் நடுநிலை பிறழாமல் அறத்தை எடுத்துக்கூற முடிந்தது. ஆதலால் எழுத்தாளர்கள் விருப்பும் வெறுப்பும், காய்தலும் உவத்தலுமின்றி இந்த நாட்டு மக்களின் அனுபவத்திற்கும் முன்னேற்றத்திற்கும் உரிய எழுத்துக்களைத் தோற்றுவிக்க வேண்டும்.

ஒரு சமுதாயத்தினுடைய எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் சமுதாயத்தில் பரவும் கருத்துக்களே காரணமாகும். ஆதலால் எழுத்தாளர்கள் இருந்த இடத்திலேயே இருந்துவிடாமல், உலகத்தின் போக்கு, காலத்தின் தேவை இவற்றைக் கருதி எழுத்தாளர்களைப் படைக்க வேண்டும். சென்ற நூற்றாண்டுத் தமிழ் எழுத்துலகில், 'முன்னோர் சொல்லைப் பொன்னேபோல் போற்றுவதும்' என்ற மனப்பான்மையில் பழைய இலக்கியங்களையே திருப்பித் திருப்பி வேறு வேறு பாவினங்களிலும் உரைநடையிலும் சொல்லிவரும் வழக்கே பெரு வழக்காக இருந்தது. "இறந்தது விலக்கல் எதிரது போற்றல்” என்பது இலக்கண விதியாக இருந்தும், மரபியல் மயக்கத்திலே எதிரது போற்றும் முயற்சியைச் செயற்படுத்தவில்லை. மரபுவழிப் போற்றுதல் இன்றியமையாத ஒன்றேயாம். ஆனாலும், வாழ்க்கையில் அடிப்படைக் கூறுகளுக்கே கு.XV.27