பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/424

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

412

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


படாத ஒரு வாழ்க்கை முறை சமுதாயத்தில் நிலவுவதைப் பார்க்கிறோம்.

தமிழகத்தில் சென்ற தலைமுறையின் எழுத்தாளர்கள் கூட இந்தத் தரங்கெட்ட சமுதாய அமைப்பை நியாயப்படுத்த முயற்சித்த வெட்கக் கேட்டை என்னென்று சொல்வது! ஐயகோ! பாவம் எழுத்தாளன் மட்டுமா? சமய வழிப் பயின்றவர்கள்கூட அநீதியையும், அநியாயத்தையும் கட்டிக் காக்க முயற்சித்தனர் என்பதை எண்ணிப் பார்க்கும் போது வேதனையே பெருகுகிறது. இன்றைய பாரத சமுதாயத்தில் உடனடியாகத் தேவை எல்லோரும் இன்புற்று வாழுகிற சமநிலை சம வாய்ப்புச் சமுதாயத்தை உருவாக்குவதுதான். இதையே இன்றைய நமது ஆட்சித் தலைவர்கள் "சோஷலிச சமுதாய அமைப்பு” என்று கூறுகிறார்கள். இத்தகையதொரு சமுதாய அமைப்பை 300 ஆண்டுகட்கு முன்பே கம்பன் பேசியிருக்கிறான். இத்துறையில் வள்ளுவனைவிடக் கம்பன் மிஞ்சிவிட்டான். திருவள்ளுவர் "இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று” என்றார். ஆனால், கம்பனோ, "கொள்வார் இலாமையால் கொடுப்பார்களும் இல்லை மாதோ" என்று பேசுகிறான். இன்றைய இந்திய எழுத்துலகில் செல்வாக்குப் பெற்றிருப்பவர்கள் பெரும்பாலும் இக்கொள்கைக்கு முரண்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறோம். இன்றையப் பத்திரிகை உலகில் ஆதிக்கம் செலுத்தும் பல பத்திரிகைகள் வகுப்புவாதத்திற்கும் சுரண்டி வாழும் முதலாளித்துவத்திற்கும் துதிபாடும் வகையிலேயே இருப்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள் என்றே கருதுகிறேன். அதுமட்டுமா? தருமத்தையும் மதத்தையும் சாட்சிக்கு இழுத்துக் கொள்ளும் அலங்கோலப் போக்கையும் பார்க்கிறோம். எல்லோரும் இன்புற்று வாழும் வாழ்க்கைக்கு மக்களைத் தயார் செய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள். இக்கருத்துக்கு முரணான பிற்போக்குச் சக்திகளின் மூதேவித்