பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/425

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

413


தன்மையை மக்களின் முன்னே அம்பலப்படுத்தத் தவறாதீர்கள். "தனியொருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று முழங்கிய கவிஞன் உங்கள் முன்னோடி என்பதை மறந்துவிடாதீர்கள்.

நம்முடைய தமிழ் இலக்கிய வரலாறு காலங்கடந்தது. தமிழ் இலக்கிய வரலாறு மூவாயிரம் ஆண்டு பழமையுடையது. தமிழ், வாழ்வில் கலந்த இலக்கிய வளம்பெற்ற மொழி என்னும், பழந்தமிழ்ப் புலவர்கள் காலத்தின் தேவையறிந்து இலக்கியம் செய்ததைப் பல இன்றைய தமிழ் எழுத்தாளர்களும், இன்றையத் தேவையறிந்து எழுத்தை வளர்க்க வேண்டும். நாம் வாழ்வது அறிவியல் நூற்றாண்டு. எனினும் இன்னும் தமிழில் போதிய அறிவியல் நூல்கள் வரவில்லை. அறிவியலைத் தமிழில் கொண்டுவர முடியுமா முடியாதா என்ற கேள்வியும் தயக்கமும் நம்மிடமிருக்கிறது. இது ஒரு பெரும் குறை. தமிழில் அறிவியல், தொழிலியல், பொருளியல், உளவியல் நூல்கள் நிறைய வெளிவர வேண்டும். அப்பொழுதே தமிழ் வளரும், தமிழர்களும் வளர முடியும். இத்துறையில் எழுதிக் குவிக்கும் எழுத்தாளர்கள் எண்ணற்ற பேர்கள் தமிழன்னைக்குத் தேவை. இத்துறை எழுத்தாளர்கள் தமிழில் தயாராவதற்குத் தமிழ் பயிற்சி மொழியாக வேண்டும். அரசாங்கம் எவ்விதமான தயக்கமுமின்றித் தமிழைப் பயிற்சி மொழியாக்க வேண்டும். தமிழ் எழுத்தாளர்கள் இத்துறையில் உழைப்பதன் மூலமே தமிழைச் சாகாமல் காப்பாற்ற முடியும்.

மனித வாழ்வின் இறுதி இலட்சியம் எல்லாவிதமான உணர்வுகளினின்றும் விடுதலைபெற்று அமைதி நிறைந்த இன்ப அன்பிலே திளைப்பதுதான். இந்த, விடுதலையைத் தருவதுதான் சமயநெறி. இத்தகு சமயச் சார்பு நிரம்பிய வாழ்க்கையில் மனித சமுதாயம் வளராது போனால் சுட்டதோசையைத் திரும்பத் திரும்பச் சுடுவது போல அவல உணர்வுகளிலே அழுந்தி வாழ்க்கையே துன்பச் சுமையாகி