பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/434

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

422

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாடங்களைப் பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப்பட வேண்டும். ஒற்றுமையை உருவாக்கக்கூடிய பாடங்களை வலியுறுத்த வேண்டும்.

இந்தியா முழுமையும் சுற்றிப் பார்த்து வர நீண்ட சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் பங்கு கொள்ள இயன்ற உதவிகளையும் வசதிகளையும் அரசினர் அளிக்க வேண்டும். குறைந்தது மற்ற மாநிலங்களையாவது சுற்றிப் பார்வையிட்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் வேறுபட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், எண்ணக் கருத்தைச் சுதந்திரமாகப் பரிமாறிக் கொள்ள இயலும். ஆகவே இதன் மூலம் மற்ற மாநில மக்களோடு நெருங்கிய உறவுகொள்ளவும் முடியும். இந்திய ஒருமைப்பாடு ஆற்றல் பெற்று வலிமையடையக் கூடும்.

உள்ளத்துணர்ச்சியோடு ஒன்றியதாகத் தேசிய ஒருமைப்பாடு அமைய வேண்டுமே அல்லாது புறப்பகட்டாக அமைந்துவிடக் கூடாது. இந்த வகையான இந்திய ஒருமைப் பாட்டைப் பெறுதற்கு சக்தி வாய்ந்த ஒரு தேசிய இலக்கியத்தைக் கண்டாக வேண்டும். அந்த இலக்கியம் அனைத்திந்தியாவும் ஆதரித்து ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைதல் வேண்டும். சொந்த இலக்கியத்தைப் பெற்ற ஒரு நாடு நல்ல மாட்சிமை பெறும் என்பது கார்லைனின் கருத்து.

சாதியாலோ சித்தாந்த நம்பிக்கையாலோ அல்லது மதத்தாலோ ஏற்படுகின்ற துரபிமானம் இல்லாத நல்ல பண்பாடு உடைய வாழ்க்கையைப் பற்றிப் போதிப்பது திருவள்ளுவரின் திருக்குறளாகும்.

மனித வாழ்க்கைக்கு இலக்கணமாகத் திகழும் திருக்குறளை இந்திய மாநில மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்த்தாக வேண்டும். மத்திய அரசாங்கம் திருக்குறளைத் தேசிய இலக்கியமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.