பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/437

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

425


சமயம் ஒன்றுதான் மனிதனைத் திருத்துவதற்குரிய சரியான சாதனம்; ஒளவையார் தனது 'ஆத்தி சூடி'யில் 'அறம் செய்' என்று கூட வலியுறுத்தவில்லை.'அறஞ்செய விரும்பு' என்றுதான் வற்புறுத்துகிறார். செயற்பாட்டைக்கூட அல்ல செயற்பாட்டிற்குரிய விருப்பத்தைச் சீர்படுத்திச் செழுமைப்படுத்துவது சமயம், இதனைத்தான்,

"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்"

என்று பேசினார் திருவள்ளுவர்.

விண்ணோக்கிச் செல்லும் பொருளை மண்ணோக்கி இழுக்கும் ஈர்ப்புச் சக்தி மண்ணுக்கு இருப்பது போல வானோக்கிப் பறக்கிற மனிதனையும் கீழ்நோக்கி இழுத்து வருகிற ஆற்றல் வஞ்சனை, பொய், புனைகருட்டு முதலியவற்றிற்கு இருக்கின்றன. இத்தகு ஆற்றல் படைத்த வஞ்சனை, பொய், புனைகருட்டு ஆகியவற்றின் ஆற்றலை அடக்கி மனிதனாக, மாமனிதனாக ஆக்கும் சக்தி மதத்திற்கும், கடவுள் நம்பிக்கைக்கும் உண்டு.

தன்னலமே இல்லாமல் இருக்க வேண்டும் என்று கூட நான் கூற விரும்பவில்லை; தன்னலத்திற்கு ஓர் எல்லைக் கோடு இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. அத்தகைய எல்லைக்கோட்டை வகுப்பதுதான் ஒழுக்கம். தனி மனிதர்களுக்கு மட்டுமல்ல - வணிகர்களுக்கும் இந்த ஒழுக்கம் இன்றியமையாதது.

'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்' என்றார் திருவள்ளுவர். உழவுத் தொழில் உற்பத்தித் தொழில், களங்கம் ஏற்படுத்தவும் வாய்ப்பில்லாத தொழில், வாணிபத் தொழில் அப்படியல்ல. எளிதாகக் களங்கம் ஏற்படுத்திவிடக் கூடிய தொழில். வாணிபத் துறையை யொட்டித் தமிழகத்தில் இலக்கியங்களே தோன்றியுள்ளன. சிலப்பதிகாரத்தில் கோவலனின் குடிச் கு.XV.28