பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/451

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

439


முதலீடு செய்து தொடங்கலாம். இந்த 13 கோடி ரூபாயையும் ஒரே காலத்தில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமும் வராது. பத்தாண்டுத் திட்டம் இதற்குத் தீட்டிப் படிப்படியாக நடைமுறைப்படுத்தி முழுமை நிலைக்குக் கொண்டு வரலாம். தொடக்க நிலையிலேயே 13 கோடியில் முழுநிலையில் தொடங்குவதற்கும் தடையில்லை. ஆனால் முதலிரண்டு ஆண்டுகளில் ஆமணக்குச் சாகுபடிசெய்து ஆமணக்கு மூலப்பொருள் கிடைக்க வேண்டுமென்பதால் மூன்றாண்டுத் திட்டமாகவும் வகுக்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் ஏராளமான விவசாயிகள் பயன்படுவர். நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். இந்தத் தொழிலில் முதலீடுசெய்யும் முதலீட்டுக்கு 34% இலாபம் கிடைக்கும். இத்திட்டத்தை ஒத்துக் கொண்டால் இத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்குரிய முயற்சிகளுக்கு நாமும், காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வக இயக்குநர் விஞ்ஞானி பேராசிரியர் எஸ்.கே. ரங்கராஜன் அவர்களும் பூரண ஒத்துழைப்புத் தரக்கடமைப்பட்டிருக்கிறோம். இத்தொழிலைத் தமிழ்நாட்டில் அமைப்பதென்றால், பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டம், இராமநாதபுர மாவட்டம் இரண்டும் தான் ஏற்புடையவை. இந்த மாவட்டங்களில் முன்பே ஆமணக்கு 1000 ஏக்கரில் சாகுபடியாகிக் கொண்டிருக்கிறது. மேலும் சாகுபடி செய்ய வாய்ப்புண்டு. ஆதலால் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டம் இரண்டையும் இணைக்கும் இளையான்குடிப் பகுதியில் இத்தொழில் அமைவது சாலப்பொருத்தம் என்பதையும் தமிழ்நாடு வளர்ச்சி அறக்கட்டளையின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம்.

அடுத்துத் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கியமான இடம் வகிப்பது கால்நடை வளர்ப்பேயாம். கால்நடை