பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/458

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

446

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இந்தவகையில் உங்களுக்குப் பூரண ஒத்துழைப்புக் கொடுப்பார்கள் என்று அவர்கள் சார்பில் உறுதி கூறுகின்றோம். தமிழ்நாடு வளர், இலக்குகளை வடிவமைப்போம்! ஒருங்கிணைந்த உணர்வுடன் உழைப்போம்! நன்றி!

31. அழகப்பா பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாப் பொழிவு

4-4-1994

அழகப்பா பல்கலைக் கழக வேந்தர் அவர்களே! துணைவேந்தர் அவர்களே! பேராசிரியப் பெருந்தகையர்களே! மாணவர்களே! திருவருள் துணையால் வாழிய நலத்துடன்; வளத்துடன்!

அழகப்பா பல்கலைக் கழகம் தோன்றுதற்குக் காரணமாக அமைந்த வள்ளல் அழகப்பர் அவர்கள் அறிவைத் தேடுவதில், அறிவைத் தருவதில் ஆர்வம் மிக்கவர். பொதுவாக நகரத்தார் வட்டித் தொழில் செய்யும் இயல்பினர். தனி வட்டி என்ற வழக்கில், கூட்டு வட்டியே நடைமுறை. ஆனால் அழகப்பர் கொழுத்த வட்டி ஈட்டித்தரும் முதலீடு என்று கூறப்பெறும் "கல்வியில் முதலீடு” செய்தார். அருகில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வள்ளல் டாக்டர் அழகப்பர் முயற்சியினாலும் முதலீட்டினாலுமே காரைக்குடிக்கு வந்தது. இன்று இந்த ஆராய்ச்சி நிறுவனம் நமது பகுதிக்கும் நாட்டிற்கும் செய்து வரும் தொண்டு அளப்பரியது. வள்ளல் டாக்டர் அழகப்பர் கொடையில், மழலையர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரையில் தோன்றி வளர்ந்தன; வளர்ந்து வருகின்றன. பல ஆயிரக்கணக்கான அறிஞர்களை நாட்டுக்குத் தந்துள்ள பெருமை, அழகப்பா கல்வி நிறுவனங்களுக்கு உண்டு.