பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/460

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

448

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொண்டு இன்றைய தலைமுறை அந்த பின்னடைவுகளைத் தவிர்க்க வேண்டும். இஃது இன்றைய இளைய பாரதத்தின் முன்னுள்ள கடமை.

இன்று நம்முடைய சமுதாயத்தை நாம் வழிநடத்திச் செல்லவில்லை; செல்ல இயலவில்லை. ஏன்? இன்று நம்முடைய வாழ்க்கைப் போக்கின் அமைப்பினால், சமுதாயம் என்ற ஒன்றே இன்னமும் உருக்கொள்ளவில்லை. நாம் ஒரு கூட்டமாக வாழ்கிறோம். ஆனால், கூடித் தொழில் செய்து வாழவில்லை நம்முடைய நாட்டில் கூட்டுறவு போதிய வெற்றியைப் பெறவில்லை. நாம் ஒரு சமுதாயமாக வாழ முயன்றோம். இல்லை! காடுபோல வாழ்கிறோம்! தோட்டம்போல, தோப்புப்போல வாழ முயன்றோம் இல்லை. பன்னூறு ஆண்டுகளாக எப்படியோ விளைந்த வேற்றுமைகள் மேலும் மேலும் வளர்கின்றன.

இந்தியா, நிலப்பரப்பால் ஒரு நாடுதான! ஆனால், நாம் அனைவரும் இந்தியராகவில்லை. சாதிகள், மொழிகள், மதங்கள் ஆகியன நம்மை வேற்றுமைப் படுத்துவதில் - ஒருவருக்கொருவரை அந்நிய படுத்துவதில் போதிய வெற்றிகளைப் பெற்றே வருகின்றன. இது மறுக்கமுடியாத - வருந்தத்தக்க உண்மை. நம்மை இந்தப் புவியில் - புவிக்கோளத்தில் நடக்கும் சம்பவங்கள் - நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. சம்பவங்களும் நிகழ்ச்சிகளும் நம்முடைய ஆளுமைக்குக் கட்டுப்பட்டனவாக இல்லை. புவி ஈர்ப்பு ஆற்றலால் பொருள்கள் கீழே விழுதல்போல, புவியின் நிகழ்வுகள் நம்மை இழுத்துச் செல்கின்றன; அல்லது ஆட்டிப் படைக்கின்றன. நாம் உணர்ச்சி வசப்படுகிறோம். நம்மை சுற்றிலும் நடக்கும் சம்பவங்கள் - நிகழ்வுகள் நம்மைக் கடுமையாகப் பாதிக்கின்றன. இந்த பாதிப்புக்களே நம்மை வழி நடத்துகின்றன; வாழ்தலுக்கும் காரணமாகின்றன. நாம் இந்தப் புவியை இந்தப் புவியின் வரலாற்றைத் திட்டமிட்டு நடத்தவேண்டும். புவியை நடத்துக! நடத்துக புவியை!