பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/468

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

456

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தலைமுறை நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கித் தந்தது. நாங்கள் இளைய பாரதத்தினராகிய உங்களுக்கு எதையும் புதிதாகத் தரக்கூடிய நிலையில் இல்லை! எங்களை மன்னித்து விடுங்கள்! நாடு உங்களைத் தாங்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள்! நாட்டை நீங்கள் தாங்க வேண்டிய திருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். இந்தியத் தேர், இடைவழியில் சகதியில் - சேற்றில் சிக்கிக் கொண்டு நிற்கிறது. இந்தியத் தேரின் சக்கரங்கள் அந்நிய மூலதனம், சாதிச் சழக்குகள், மதப்பிணக்குகள் ஆகிய சகதிகளில் சிக்கிக் கொண்டு புதைந்து நிற்கிறது. சுயநலம், கையூட்டு ஆகியன மோதி தேரின் அச்சு முறியும் நிலையில் இருக்கிறது. இளைய பாரதத்தினரே! உடன் தோள் உயர்த்தி வாருங்கள்! தேரைத் தூக்கி நிறுத்துவோம்! அதன்பின் வடம் பிடித்துத் தேரை எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதான இடம் நோக்கி இழுத்து, தேரினை நிலை சேர்ப்போம். இருபத்தோராம் நூற்றாண்டுக்குள் இந்தியத் தேரினை தேர் நிலைக்குக் கொண்டு சேர்க்கும் வலிமையை இளையபாரதம் பெறுக.

வளர்க அழகப்பா பல்கலைக் கழகம்!

வளர்க வள்ளல் அழகப்பர் புகழ்!