பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/477

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

465

அப்படி அஞ்சலட்டை எதுவும் வரவில்லை. நெல்லையில் இருந்து திரும்பி வரும்பொழுது மகாசன்னிதானத்தின் இடைத்தங்கல். அப்படித் தங்குவதாகப் பயணத்திட்டத்தில் இல்லை. உடன் பயணம் செய்தவர்களுக்கும் புரியவில்லை. காலையில் 10 மணிக்கு மகாசன்னிதானத்தின் அறைக்குள் நமக்கு அழைப்பு அறைக்குள் சென்று வணங்கி ஆசி பெற்றோம். மகாசன்னிதானத்தின் உரையாடல் தொடர்ந்து மாலை 6 மணி வரை நீண்டது. நம்மிடம் பல வினாக்கள் தொண்டு வாழ்க்கைக்கு, துறவு வாழ்க்கைக்கு நமக்கு அழைப்பு உலகியல் வாழ்க்கையில் சராசரி நிலையில் உள்ள நாம் பக்குவ வாழ்வுக்குப் பழக்கப்பட இயலுமா? என்று நமது மறுப்பு. மகாசன்னிதானம் நவீனத்தை நேசிக்கின்ற, நம்முள் மறைந்திருந்த ஆன்மத் தேடலை அடையாளம் காட்டினார்கள். நீண்ட மெளனம் சம்மதமாய் ஏற்கப்பட்டது. ஆசி வழங்கினார்கள்.

மகாசன்னிதானம் ஞானபீடம் ஏறிய நாற்பதாம் ஆண்டு விழா திருமடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் மறுநாள்தான் நம் ஆதீனப்புலவர் மரு. பரமகுரு அவர்களின் இல்லத் திருமண விழா. அந்தத் திருமணவிழாவில் கலந்து கொள்வதே நமது திட்டம். ஆனால் மதுரையில் புதிதாக வணிகம் தொடங்கும் நண்பர் ஒருவர், தான் புதிய கட்டிடத்தை வாடகைக்குப் பெறுவதற்காக நம்மையும் வற்புறுத்தி அழைத்தார். நாம் 'மறுநாள் திருமணத்தில் கலந்து கொள்கின்றோம். இணைந்து அந்தப் பணியையும் முடிக்கலாம்” என்று சொன்னோம். அந்த நண்பர் மறுத்து விட்டார். “இந்த நாள்தான் நல்லநாள். அவசியம் வரவேண்டும்” என்று வற்புறுத்தி அழைத்து வந்தார். நாம் வந்தது தெரிந்ததும் மகாசன்னிதானத்திடமிருந்து அழைப்பு “இன்று நல்ல நாள். இன்றைக்கு இங்கே இருக்கலாம்” என்று மகா சன்னிதானத்தின் உத்தரவு. "வீட்டில் சொல்லி வரவில்லை. சொல்லி வருகின்றேன்.” என்று நம்முடைய பதில். “பிறகு சொல்லிக் கொள்ளலாம்”- இது மகாசன்னிதானம், நிகழ்வது யாதும் நமக்குப் புரியவில்லை. எல்லாம் அவன் அருள் அவன் செயல்

“முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்;
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்;
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்;
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்;