பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பல நூறாயிரம் இளைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடும் நிலையில் இது சரிவருமா? அதுபோலவே நுகர்வோரின் நலங்கருதாமல் விலையை ஏற்றுவார்கள். இந்த விலைக் கொள்கை பெருவாரியான மக்களைப் பாதிக்கச் செய்யும். அதுபோலவே, திறந்த வெளிச் சந்தையின் மூலம் வியாபாரப் பொருளாதாரம் வளரும். ஆனால், உற்பத்திப் பொருளாதாரம் வளராது. பணப்புழக்கம் இருக்கும். ஆனால் அது சொத்தாக மாறாது. இது வளரும் நாட்டுக்கு ஒத்து வருமா? இந்தச் சிந்தனை இன்று உயர் கல்வியில் பொருளாதாரம் படிக்கும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறதா? மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள்? புதிய பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றி இன்றைய பொருளாதாரப் பேராசிரியர்கள், மாணவர்கள் பரவலாக விவாதிக்கவில்லையே! இதற்கெல்லாம் உயர்தரக் கல்வி வழிசெய்ய வேண்டாமா?

சுரண்டும் பொருளாதார அமைப்பு உழைப்பாளர் பங்கைத் திருடி மூலதனக்காரர்களாகி உலகியல் நடத்திவரும் முதலாளிகளிடம் விழிப்பாக இருக்கவேண்டும் என்று இன்னமும் வரலாறு கற்றுத்தர மறுக்கிறதே! இந்த முதலாளித்துவ ஆதிக்கப் போட்டியால் உலகத்தில் எத்தனை எத்தனை கொடிய போர்கள்? உயிர் அழிவுகள்? பொருட் சேதங்கள்? இந்த அழிவு வேலையில் படித்தவர்கள், மதங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் யார் எவர் என்ற வித்தியாசம் இல்லாமல் ஈடுபட்டனர். இன்றைய இளைஞர் களுக்குப் போர் மீது கடுமையான எதிர்ப்புணர்ச்சியைத் தூண்டி வளர்க்கவேண்டும். அவர்களை பாவேந்தன் பாரதி தாசன் பாடிய

"புதியதோர் உலகம் செய்வோம்!
கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்!"

என்ற பாடலை வாழ்க்கையின் இலட்சியமாக எடுத்துக் கொள்ளும்படி செய்யவேண்டும்.