பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

37



மெய்ப்பொருளியல் கல்வி தேவை

இன்றுள்ள நமது சிக்கல்களுக்கு எல்லாம் மூலகாரணம் நாம் மெய்ப்பொருளறிவை இகழ்ந்து இழந்தமைதான். அதோடு பகுத்தறிவு பெயரால் மெய்ப்பொருள் அறிவாகிய செம்பொருள் அறிவுக்கும்-மதத்திற்கும் உள்ள வேறுபாடுகளை உய்த்துணராமல் ஒட்டுமொத்தமாக இழந்தமை பரிதாபத்திற்குரியது. மதச்சார்பற்ற தன்மை என்ற கோட்பாட்டின் பொருள் புரிந்துகொள்ளாமல், கடவுள் நம்பிக்கை, மெய்ப்பொருளறிவு ஆகியவற்றை அவசரப்பட்டு கல்வியிலிருந்து விலக்கியதுதான் காரணம். நாம் பூத, பெளதிக அறிவை வளர்த்தும் பொருளாதார அறிவை வளர்த்தும் இவையெல்லாவற்றையும் ஆளும் பேறுபெறும் மனிதனை அவனுடைய ஆன்மாவை-ஆன்மாவின் தரத்தை வளர்த்து உயர்த்தத் தவறிவிட்டால் இந்த உலகம் எப்படி இருக்கும்? சிதறுண்டு போன சோவியத் இதற்கு ஓர் உதாரணமாகும். ஆதலால், மெய்ப்பொருளியல் கல்வித் திட்டத்தில் இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு அறிவையும் ஞானத்தையும் வழங்கவேண்டும். மெய்ப்பொருள் கல்வித் தேர்ச்சியால்தான் ஆன்மநேய ஒருமைப்பாடு தோன்றும்! இன்றைய உலகத்திற்கு ஆன்ம நேய ஒருமைப்பாடு தேவை! ஆதலால், இளமைக் காலம் தொட்டே மெய்ப்பொருளியல் கல்வி கற்கவும் தமது பொறி புலன்களைப் பக்குவப்படுத்தி வளர்த்துக் கொள்ளவும், சமூகத்திற்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளவும் கற்றுக் கொடுக்கவேண்டும். ஆதலால் எல்லாக் கல்வி நிலையங்களிலும் இலக்கியம், வரலாறு, தத்துவம், இசை, கலை ஆகியன கற்பிக்கும் திட்டம் கட்டாயம் தேவை. வேறுபாடாற்ற ஒரு குலமே கடவுளின் சித்தம்.

இனிவரும் தலைமுறைக்குச் சிறந்த கல்வியை நாம் வழங்குவதற்குரிய முயற்சிகளை எடுத்துக் கொள்ளவேண்டும். வாழ்க்கையில் சற்றும் பயன்படாத செய்திகளை