பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உருப்போடச் செய்யும் கல்விக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். எப்படியும் நமது சந்ததியினரை, அறிஞர்களாக்க நாம் முயலவேண்டும். அதற்கேற்ற கல்வியைத் தரவேண்டும். அறிவு பெறுவதிலும் வாழ்வதிலும் அக்கறையையும் ஆர்வத்தையும் காட்டத்தக்கவாறு கல்வி கற்பிக்கவேண்டும். ஐயத்தின் நீங்கித் தெளிந்த அறிவுடன் விளங்க, வாழக் கற்றுத் தரவேண்டும். நெடிய நோக்குடைய கல்வி கற்பிக்கவேண்டும்.

செய்வதன்மூலம் கல்வி

"செய்வதன்மூலம் கல்வி" என்பது ஒரு கொள்கை கல்வியின் பயனே செயற்பாடுதான். உடல், உள்ளம், ஆன்மா ஆகிய மூன்றையும் ஒருங்கே வளர்க்கும் கல்வி, செய்வதின் மூலம் கற்கும் கல்வியாகும். இன்று இந்தியாவை வருத்தும் மிகப்பெரிய சமூகக் கேடு, உழைப்பை அலட்சியப்படுத்தப்படுவதுதான். இந்த உலகத்தை இயக்குவதும் வளர்ப்பதும் உழைப்பேயாம். "அறிவு ஜீவிகள்," "உடலுழைப்பாளர்கள்" என்று இருவேறு உலகமாக இந்தியா பிரிந்து கிடக்கிறது. அறிவு ஜீவிகள் தங்கள் நலன்களை மட்டுமே கருதுகின்றனர். உழைப்பாளர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை. நாளும் வறுமையில் உழல்கின்றனர். இந்தநிலை மாறுவதற்குரிய கல்வி வழங்கப் பெறுதல் வேண்டும். மாணவர்களின் உழைக்கும் ஆர்வம் வளர்க்கப்பெறுதல் வேண்டும். முடிந்தால் உழைப்பின்மூலமே கல்வி கற்றுத் தரலாமல்லவா? இதுபற்றிப் பல்கலைக்கழகங்கள் எண்ணுதல் வேண்டும்.

வலிமையான அடிப்படை வேண்டும்

நம்முடைய கல்வித் திட்டத்திற்கு வலிமையான அடிப்படையை அமைக்கவேண்டும். அங்கனம் வலிமையான அடிப்படையை அமைப்பது எளிதன்று! கடினம்தான்! பகீரத முயற்சி தேவை. இந்த இலட்சியத்திற்காக நாம் அனைவரும் நமது செல்வம் உடல், உயிர், எல்லாவற்றையும்