பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

39


அர்ப்பணிக்கவேண்டும். எல்லாவற்றையும்விட நம்முடைய பணத்தையும் கல்வித் துறையில் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும். இத்துறையில் நாம் செய்யும் முதலீடு அதிக அளவு பலமடங்கு திரும்பி வரும் என்பதை நாம் உணர்தல் வேண்டும். இன்று நாம் மதத்தின் பெயராலும் அரசியலிலும் செய்யும் முதலீடு அளவு, கல்வித் துறையில் குடும்பமும் சமூகமும் அரசும் முதலீடு செய்வதில்லை என்பது வருந்தத் தக்க உண்மையாகும். “இன்றைய பள்ளிகளே நாளைய நாடாளுமன்றத்தின் கருவறைகள்” என்பதை உணர்தல் வேண்டும். கற்றுத்தரக்கூடிய ஆசிரியப் பெருமக்களை முதலில் உருவாக்கவேண்டும். அவர்களுக்கு அனைத்து வகையிலும் சமூகத்தில் மிக மிக உயர்ந்த இடத்தைத் தரவேண்டும். தரமான சிறந்த கல்வியை வழங்கும் மகத்தான பொறுப்பு நம் முன்னால் இருக்கிறது.

நமது பல்கலைக் கழகங்கள் உயர் நோக்கங்கள் உடைய உயர் கல்வியை வழங்கவேண்டும். எதிலும் புதிய அறிவையும் உண்மையையும் தேடும் மனப்பாங்கை வளர்க்கவேண்டும். நாடுகள் வளர வளரத் தேவைகள் பெருகி வளரும். மானுடத்தின் வளரும் தேவைகளை ஈடுசெய்ய முயற்சி செய்வதே அறிவின் பயன் ஆக்கம்; ஆதலால், வளர்ந்து வரும் புதிய தேவைகளை ஈடுசெய்யும் முயற்சியே இன்று தேவை. இந்தப் போக்கிற்கேற்பப் புதியன கண்டுபிடிக்கும் முயற்சிகள் வளரவேண்டும். பழைய அறிவினை அறிந்து, பொருள் கண்டு வாழ்க்கையோடு இணைக்கவேண்டும். பழைய நம்பிக்கைகள் என்பன மூடத்தனமாகவே இருக்க முடியாது. அவற்றுக்கு ஏதாவது காரணம் இருந்தாகவேண்டும். அந்தக் காரணத்தைக் கண்டு வளர்ந்துவரும் புதிய வரலாற்றுடன் இணைக்கவேண்டும்.

இன்றைய இந்திய சமூகம் வேறுபாடுகள் மிக்குடையது. ஏற்றத்தாழ்வுகள் மிகவும் அதிகம். இன்று சமூக நீதி, அன்பு என்பன கிட்டத்தட்டப் பொருளற்ற சொற்களாகப் போய்