பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

45


முறைக்கும் உதவாத, காலத்தால் தேய்ந்துபோன கருத்துக்களைத் திரும்பத் திரும்பக் கற்றுக் கொடுக்கும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அது போலவே கற்பிக்கும் கல்விக்கூடங்களிலும், அவற்றின் அமைப்பிலும் நடப்பிலும் மாற்றங்களைக் கண்டு புதுமைப்படுத்துதல் வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகளின் வகுப்பறைகள் நல்லெண்ணமும், நம்பிக்கையும், ஆர்வமும், உரிமையும், உறவும், சுறுசுறுப்பும் உடையனவாக விளங்குதல் வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், கற்கும் முறைகளை, ஆய்வு முறைகளை அறிமுகப்படுத்தி நெறிப்படுத்துவனவேயாம். ஆதலால், வகுப்பறைகளிலேயே மாணாக்கர்களுக்கு, படிக்க வேண்டிய பிற நூல்கள் அறிமுகப்படுத்தப் பெறுதல் வேண்டும். அதுபோலவே, படிக்கும் நூல்களைத் தேர்வு செய்வதில் மாணாக்கர்களுடைய விருப்பம் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். இன்றையக் கல்வி உலகத்தில் மாணாக்கர்களின் விருப்பம் செயற்பாட்டிற்கு வருவதில்லை.

மாணாக்கர் விரும்பும் கல்வி அமையவேண்டும்

மாணாக்கர்கள் தாம் படிக்க விரும்பும் துறையைக் கூடத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடிவதில்லை. மாணாக்கர்களுக்கு அவர்களின் இளமைக் காலம் முதலே எத்துறைக் கல்வியில் விருப்பமும் நாட்டமும் இருக்கிறது என்பதை அறிந்து, அவர்தம் விருப்பத்தின்படியே அவர்களைத் தூண்டி அவர்கள் கற்பதற்கும் ஆய்வு செய்வதற்கும் பணி செய்வதற்குமுரிய வாய்ப்புக்களை வழங்கவேண்டும். மாணாக்கர்கள் கற்கும் கல்வி, அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமைய வேண்டும். அஃதன்றிச் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அதை நிர்ணயிக்கும்படி அனுமதித்தல் கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் மாணாக்கர்கள் வெறுப்படையும் சூழ்நிலை உருவாகக் கூடாது. அதனால், கல்வி நிறுவனங்களில் பல