பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

55


அறிதல் வேண்டும். அதுபோலவே அறிஞருரை கேட்பதிலும் ஆர்வம் காட்டவேண்டும். கல்விப் பயணம் நீண்டது; அகலமானது, ஆழமானது என்ற உணர்வுடன் கற்றதில் திருப்தி அடைந்துவிடாமல், என்றும் கற்கும் மாணாக்கனாக இருக்கும் மனோநிலை கற்பவர்களுக்கு வேண்டும்.

இனிய அன்புடைய மாணாக்க நண்பர்களே! கல்வி பயிலுங்காலத்தில் அரசியற் கட்சிப் பணிகளில் ஈடுபடாதீர்கள்! நீங்கள் வளர்ந்து கல்வியை முடித்துக்கொண்டபிறகு நீங்கள் இந்த நாட்டை நடத்தும் பொறுப்பை ஏற்கும்போது, இந்தப் புவியைத் திறமையாக நடத்த இப்போதே திட்டமிடுங்கள்! நாளைய வரலாறு உங்களுடையதே! இது உறுதி! திரைப்படங்களையே நம்பி-அதுவே வாழ்வு என்று நம்பி-நடக்காதீர்கள். உங்களுடைய வாழ்க்கையை அறிவும் ஆற்றலும் ஆளுமையும் உடைய வாழ்க்கையாக உருவாக்கிக் கொள்ளுங்கள்! 'உங்களை இந்த நாடு நம்பி இருக்கிறது' என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.

மாணாக்கர்கள் இளமைக் காலத்திலேயே தங்களுக்கென ஒரு குறிக்கோளை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தக் குறிக்கோள் தற்சார்புடையதாக மட்டுமல்லாமல் நாட்டு நலமுடன் எதிர்வரும் தலைமுறையினருக்கும் ஆக்கம் அமைந்ததாய் இருக்கவேண்டும். நாடு விடுதலை பெற்றதிலிருந்து எத்தனையோ திட்டங்கள் தீட்டியும் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேறியும் இந்த நாட்டில் இன்னமும் சம வாய்ப்புச் சமுதாயம் அமையவில்லை! பழைய தலைமுறைகளில் வீடுகள் நாட்டுக்கு வந்தன, இன்றோ நாட்டையே வீட்டுக்குக் கொண்டுபோகும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளனர். இதனால், நாடு எய்த்துக் களைத்து நிற்கிறது! இன்று இந்த நாடு தங்களைத் தாங்கும் என்று நம்பாமல், நீங்கள் இந்த நாட்டைத் தாங்கும் ஆற்றலுடனும் உறுதியுடனும் நாட்டு வாழ்க்கையில் அடி எடுத்து வையுங்கள்