பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

65


நிறுவுதல் அவசர அவசியக் கடமை. இந்த அமைப்பு தோன்றிச் செயற்படத் தொடங்கிய பிறகு ஆசிரியர்கள், இயக்கம் நடத்தும் உரிமையைத் தடுத்துவிடலாம்.

இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆசிரியர்களுடைய பிரச்சனைகளை ஆய்வு செய்து, முடிவுகள் எடுத்து, நடைமுறைப்படுத்துவதற்கு என்றே தேர்ந்தெடுக்கப்பெற்ற ஆசிரியர்களின் பிரதிநிதிகள், அரசின் பிரதிநிதிகள் கூட்டுக் கூட்டம் - மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு அப்போதே உண்டு - இல்லை என்று முடிவு எடுக்கப்படுகிறது. எடுத்த முடிவுகளை அரசு நடைமுறைப்படுத்துகிறது; பள்ளி நிர்வாகம் நடைமுறைப் படுத்துகிறது. இந்த நடைமுறையை நமது நாட்டில் நடைமுறைப்படுத்துவதன்மூலம் ஆசிரியர்களின் போராட்டத்தைத் தவிர்க்கலாம் என்பது பற்றி அரசு ஆலோசிக்க வேண்டும்.

சமுதாய அமைப்பே சீர்குலைந்து கிடக்கும்பொழுது ஆசிரியர்களிடம் எங்ஙனம் நிறைவைக் காணமுடியும்? நியாயமான கேள்வி! ஆசிரியர்களிடம் இயக்கத்தையும் அர்ப்பணிப்பு உணர்வையும் நாம் எதிர்பார்க்கிறோம். இல்லை! நாட்டின் நலன்கருதி வேண்டிக்கொள்கின்றோம். சமுதாயச் சீர்திருத்தம் ஆசிரியர்களிடமிருந்து தொடங்கட்டும் என்பது தான் நமது எண்ணம் விருப்பம். இன்று நாட்டை நன்னெறியில் நடத்திட ஆசிரியர்களுக்கு உள்ள ஆற்றலும் திறமையும் துணை செய்யும் என்று நம்புகின்றோம்.

பெற்றோர் கடமை - சமுதாயக் கடமை

ஆசிரியர்கள் அவர்களுடைய பொறுப்பு வாய்ந்த பணியைச் செய்யப் பெற்றோர்களுடைய ஒத்துழைப்புத் தேவை. அஞ்சல்தலையில், ஒட்டுதலுக்குரிய ஒருவகைப் பசை இருக்கிறது என்பது உண்மை. ஆனாலும் அந்தப் பசை ஒட்டுதலுக்குப் போதாது. புறத்தே ஈரப்பசையைக் கூட்ட வேண்டும். அதுபோல ஆசிரியர் பணிக்குப் பெற்றோர் ஒத்துழைப்புத் தேவை.