பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அமைய முடியும். வாழ்வாங்கு வாழத் துணைசெய்யும்; அறிவினைப் பெற, சிந்திக்க கற்றுக் கொள்ளவேண்டும். சிந்தனையில் தெளிவும் - முடிவும் காணவேண்டும். முடிவுகள் செயல்களாக உருக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு அறிவினைப் பெறுதல் வேண்டும்.

அறிவு

அறிவு ஒரு கருவி; மனிதனை, மனித சமூகத்தைத் துன்பத்திலிருந்து - பாதுகாக்கும் கருவி. இந்த அறிவு என்னும் கருவி பண்டைக்காலத் தமிழர்களிடம் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால், பிற்காலத்தில் அதாவது சற்றேறக்குறைய ஐந்நூறு ஆண்டுகளாகத் தமிழர்கள் இந்த அறிவினை இழந்து விட்டார்களோ என்ற ஐயம் தோன்றுகிறது. அல்லது அறிவினைப் பெறும் முயற்சியே இல்லையா? அல்லது அறிவு இருந்தும் பயன்படுத்தவில்லையா? அறிவைப் பயன்படுத்தாமல் இருக்க இயலாது. அறிவு ஓர் இயங்கும் கருவி. தானே இயங்கும் கருவி. தமிழர் வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் அறிவு நம்மனோரிடத்தில் இல்லைபோல் உணர வேண்டியிருக்கிறது. நம்மிடையில் கற்றவர்கள் மெத்தப் படித்தவர்கள் பலர் உள்ளனர். பேசும் திறமை உடையவர்கள் நிறைய பேர் உண்டு. ஆனால், சமுதாயச் சிக்கல்களை அறைகூவல்களாக ஏற்றுக்கொண்டு போராடுபவர்கள் தான் இல்லாமல் போனார்கள். அதுமட்டுமா? அயல் வழக்கின் வழிவந்த நவக்கிரக வழிபாட்டை ஏற்றுக்கொண்டதன் விளைவாக வாழ்நிலைக்குக் கிரகங்களைக் காரணம் தாட்டுதல் தலைவிதியைக் காரணமாகக் கூறல் போன்ற அறிவுக்குப் பொருந்தாத, தமிழர் மரபுக்குப் பொருந்தாத நிலைப்பாடுகளை எடுத்துக்கொண்டதன் விளைவாக நாளும் வறுமை வளர்கிறது. இது என்ன கொடுமை: “வினையே ஆடவர்க்கு உயிரே” என்று வாழ்ந்தனர் தமிழர்.