பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இருப்பவர்கள் இரண்டு முதல் ஏழு சதவீதத்தினராக இருக்கும் மேட்டுக் குடியினர்தாம்! மக்கள் யாவரும் சமநிலையில் கல்வி கற்று முன்னேறுவதை விரும்பாதவர்கள், ஆங்கில வழிக் கல்வியை ஆதரிக்கின்றனர். இன்றும் அறிஞர்கள் என்று மதிக்கப்படுபவர்கள் பல்கலைக் கழகத் துணைவேந்தர்கள் அனைவரும் தாய்மொழி வழிக் கல்வியை - தமிழ் மொழி வழிக் கல்வியை ஆதரிக்கின்றனர். ஆயினும் எங்கோ ஒரு தயக்கம் இருக்கிறது. தமிழ்நாடு அரசு கல்வியிலும் இரு மொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது; இது தவறு! இந்தியாவிற்குத்தான் இருமொழிக் கொள்கை! தமிழ் நாட்டு அரசின் நடைமுறைக்குத்தான் இருமொழிக் கொள்கை; கல்விக்கல்ல; கல்வித்துறையில் தமிழ்நாட்டில் தமிழ்மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்; ஆங்கிலம் ஒரு மொழியாக மட்டும் கற்பிக்கப்படுதல் வேண்டும். ஆனால் தமிழ் நாடு அரசு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் பயிற்று மொழியாக வைத்திருப்பது தமிழ் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது. தமிழ் பயிற்று மொழியின் மூலம் கற்பதின் பயனை அறியாத பெற்றோர்கள் மேட்டுக்குடியினர் வழியில் ஆங்கில வழிக் கல்வியையே தமது பிள்ளைகள் கற்கவேண்டும் என்று விரும்புகின்றனர். பெரும்பாலும் தமிழ் வழிக் கல்வியைத் தேர்ந்தெடுப்பவர்கள் தமிழுக்கு ஆக்கந்தரும் திறமுடையவர்களாக இருப்பதில்லை தரமும், திறமும் உடையவர்கள் ஆங்கில மொழி வழிக் கல்வி வகுப்புகளிலேயே சேர்கின்றனர். இதனால் சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது; ஒருமைப்பாடு இல்லாமல் போகிறது. ஆதலால் ஆங்கில மொழி வழிக் கல்வி வகுப்புக்களைத் தமிழ்நாடு அரசு மூடவேண்டும். ஆங்கில மொழி வழிக் கல்வி கற்பிக்கும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தரக்கூடாது. மாணவர்களும் - ஆங்கில மொழி வழிக் கல்வி வகுப்புக்களை மறுத்து, தமிழ் வழிக் கல்வி வகுப்புக்களிலேயே சேர்ந்து படிக்கவேண்டும்.