பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நுட்பத்திற்குச் சான்றுகளாக விளங்குவன. இவை மட்டுமா? தமிழிலக்கியங்களில் பரவலாகத் தாவர இயல் செய்திகள், பொறியியல் செய்திகள், மருத்துவ இயல் செய்திகள் காணக்கிடக்கின்றன. அந்தக் கருத்துக்களைத் தொடர்ந்து செயலாக்கம் தந்து வளர்க்காமையால் தமிழ் வளர்ச்சியில் ஒரு தேக்கம் ஏற்பட்டுவிட்டது. சமச்சீரான தட்ப வெப்ப அறைகளைப் பற்றி இளங்கோவடிகள் தாம் இயற்றிய சிலம்பில் கோவலன் வாழ்ந்த எழுநிலை மாடத்தைக் காட்டுகிறார். ஏன் கண்ணப்பர் வரலாற்று நிகழ்வு கி.மு. 42 என்பார் சிவக்கவிமணி சுப்பிரமணிய முதலியார். கிறிஸ்து பிறப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ‘கண் பதிய முறை’ மருத்துவத்தை இந்தியா கண்டிருக்கிறது என்பதைக் கண்ணப்பநாயனார் வரலாற்றின் வழி அறிகின்றோம். ஆயினும் என்ன பயன்? தொடர்ச்சி இல்லையே! வளர்ச்சியில் நாட்டமில்லையே! ஆதலால் தமிழ் அறிவியல் மொழியாக வளராததற்குத் தடை தமிழின் தகுதிப்பாட்டுக் குறையல்ல. வரலாறு செய்த பிழையும் அல்ல; தமிழரின் மூளைச் சோம்பலே காரணம்! செயலின்மையே காரணம். இந்த நூற்றாண்டிலாவது விழிப்புணர்வு பெற்று வளரத் தமிழ்வழிக் கல்வி பெறுவோம்! அறிவு பெறுவோம்! தமிழை வளர்ப்போம்!

தமிழ் வழிக் கல்வி கற்பித்தால் சிந்தனை விரிவடையும். வினாக்களும் விடைகளும் கல்வியில் இடம் பெறும். அறிந்த - உணர்ந்த கல்வி பெற இயலும். நெட்டுரு அவசியப்படாது. ஆதலால் அறிவு பெற தமிழ் வழிக் கல்வியே தேவை.

இன்று, தமிழ் பயிற்று மொழி ஆவதற்குத் தடை - தமிழின் தகுதியின்மை காரணம் அல்ல. சமூக மேலாதிக்க மனப்போக்கே காரணம். பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கும் மனிதர், மேலே எழுந்து வந்துவிடக்கூடாது என்று கருதுகின்றனர். இந்தச் சமூக மேலாதிக்கக் கொள்கை தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில்