பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

87


நிறைவேற வேண்டுமானால் “உயர்கல்வி முதல் பல்கலைக் கழகங்கள் வரையில் மாநில மொழிகள் - தாய் மொழி, மக்கள் மொழி - முதலில் பயிற்று மொழியாதல் வேண்டும்” என்று வற்புறுத்தியுள்ளது.

தமிழ் பயிற்று மொழி இயக்கம் கடந்த அரைநூற்றாண்டாக முயன்றும் வெற்றி பெறவில்லை. ஏன்? மாணவர்கள், பெற்றோர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை. நாடு தழுவிய நிலையில் அனைத்து மக்களும் அகன்ற அறிவு பெற்றால்தான் தமிழ் பயிற்று மொழி இயக்கம் வெற்றி பெறமுடியும்; தமிழ்மொழி அறிவியல் மொழியாக வளரமுடியும். “நமது கொள்கை வெற்றிபெறும் வரையில் முழுமனத்தோடு முயன்று ஆவன அனைத்தையும் தயங்காமல் செய்து வைத்தால் நாம் விரைவில் வெற்றி பெறுவோம். ஆனால் வெற்றிபெறும் நாள், வேண்டினால் வராது; வணங்கினால் வராது; சினந்தால் வராது; முயன்றால் மட்டுமே வரும்! அந்நாள் விரைவில் வருமாறு அனைவரும் ஒன்றாக முயல்வோமாக!” என்ற பெ.நா. அப்புசுவாமி அவர்களின் அழைப்பை ஏற்போமாக!

தொகுப்புரை

இனிய அன்புடையீர்! மனித குலத்திற்கு வாய்க்கும் அருட்கொடைகளில் தாய்மொழியும் ஒன்று. தமிழர்களின் தாய்மொழி தமிழ். இது இலக்கிய இலக்கண வளம் செறிந்தது; நீண்டநெடிய வரலாறுடையது.தமிழ் மொழியைக் காலங்கள் தோறும் உரியவாறு பேணி வளர்த்துக் காத்து, நமக்குத் தந்தருளி இருக்கிறார்கள் நமது முன்னோர்கள். நீர், நெருப்பு இரண்டையும் கடந்து தமிழ் வென்று விளங்குகிறது. இந்த நூற்றாண்டு அறிவியல் நூற்றாண்டு. இந்த அறிவியல் நூற்றாண்டுக்கு ஏற்றாற்போல் தமிழை அறிவியல் மொழியாகத் தமிழர்கள் வள்ர்க்கும் முயற்சியில் தமிழர்கள் ஈடுபடவில்லை. தங்களுடைய சிந்தனையை அறிவியல் சார்ந்ததாக