பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வலிமையுடையதாக இல்லை. சோழப் பேரரசின் உறையூர்ப் பகுதியைப் பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் பிடித்துக் கொண்ட பின்னர் பாண்டியர்க்கும் சோழர்க்கும் இடையே நட்புறவு வளர்ந்ததன் பயனாக மணிமுடிச் சோழனின் மகள் மங்கையர்க்கரசியை நின்றசீர் நெடுமாறன் திருமணம் செய்து கொண்டான். சோழ மாதேவி, பாண்டிமாதேவியாகப் பாண்டி மண்டலம் வந்தாள். மங்கையர்க்கரசியின் கணவன் பாண்டியன் அப்போது அலை அலையாக வந்த அயல் வழக்குகளில் மயங்கினான்; செழுந்தமிழ் வழக்கின் மரபுகளை மறந்தான்். மங்கையர்க்கரசியார் மனம் பதறியது. வழி வழியாக வளர்ந்து வந்த வாழ்வியல் என்னாவது: சிந்தனை செய்தாள்; பாண்டியப் பேரரசின் அமைச்சர் குலச்சிறையாருடன் கலந்து ஆலோசனை செய்தாள். "ஞாலமுய்ய நாமுய்ய திருஞான சம்பந்தரை அழைக்க ஒருப்பட்டாள்.

திருஞானசம்பந்தரும் பாண்டிய நாட்டுக்கு எழுந்தருளுகின்றார். பாண்டிய அரசைச் சூழ்ச்சியால் கையகப் படுத்திய அயல்வழக்கினர் திருஞானசம்பந்தரை எதிர்க்கின்றனர். ஏன், அவர் தங்கியிருந்த திருமடத்திற்கே தீயிடுகின்றனர். விவாதங்கள் வளர்கின்றன. பாண்டியன் சூலைநோய்க்கு ஆளாகின்றான். பாண்டியனைச் சூலை நோயிலிருந்து மீட்டு, திருஞானசம்பந்தரின் மந்திரத் தன்மை நிறைந்த திருநீற்றுப் பூச்சு வெற்றிகொண்டது. அனல்வாதம் புனல்வாதம் என்றெல்லாம் தொடர்கின்றன. எல்லாவற்றிலும் திருஞான சம்பந்தரே வெற்றிகொள்கின்றார். பாண்டிய நாடுற்ற இடர் நீங்கியது. செந்தமிழ் பிழைத்தது. செந்தமிழின் பயனாகிய சிவநெறி விளக்கமுற்றது. திருநீறு பிழைத்தது. தமிழுலகம் மகிழ்ந்தது. பாண்டிமாதேவி மங்கையர்க்கரசி தமிழக வரலாற்றைக் காப்பாற்றித் தந்த தெய்வம் ஆகிறாள். அதனால் சேக்கிழார்,