பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் – ஒரு நாகரிகம்

93


தமிழ்ச் சங்கங்கள் நிறுவித் தமிழை வளர்த்தனர்; தமிழ் நெறியை வளர்த்தனர். செந்தமிழ் வழக்கைப் போற்றிப் பாது காத்தனர். பாண்டிய அரசர்கள் குடிகளைத் தழுவிய அரசர்கள்; நீதி சார்ந்த அரசர்கள். பொற்கைப் பாண்டியன், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் ஆகியோர் நீதிக்காகவே தம்மை இழந்தனர். இத்தகைய வரலாறுகள் உலக வரலாற்றில் யாண்டும் இல்லை. இவ்வாறு புகழ் பெற்ற பாண்டியப் பேரரசின் நாட்டு எல்லை அடியிற் கண்டவாறு கூறப்பெறுகிறது.


"வெள்ளா றதுவடக்காம் மேற்குப் பெருவழியாம்
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்ட கடல்கிழக்காம் ஐம்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி".

இந்த நாட்டு எல்லையில் செந்தமிழ்க் கவிஞர்கள் எண்ணற்றவர்கள் வாழ்ந்துள்ளனர். உலகு போற்றும் உயர் அறவுரையாகிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கவிதையினைத் தந்த கணியன் பூங்குன்றனார்தான்் பாண்டி நாட்டை அணி செய்தவர். புலனழுக்கற்ற அந்தணாளன் கபிலன், பாண்டிய நாட்டில் பிறந்து தமிழகம் தழுவிய புகழுடையவர். நற்றமிழ்க் கீரனும் பாண்டிய நாட்டுக்கே உரியவர். நெஞ்சினை நெகிழ்வித்து, மனிதனை மனிதனாக வளர்க்கும் திருவாசகத்தைத் தந்த மாணிக்கவாசகரும் பாண்டியநாட்டுத் திருவாதவூரிலேயே பிறந்தவர். பாண்டிய நாட்டை ஆண்ட அரசர்களில் பலர் கவிஞர்களாகவும் இலக்கியப் படைப்பாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள். பாண்டியன் அறிவுடை நம்பி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

தமிழ் - ஒரு நாகரிகம்

வரலாறு ஒரே மாதிரியாகச் செல்வதில்லை. ஏற்றத் தாழ்வுகள் நிகழ்வது தவிர்க்க முடியாதது. தமிழ் ஒரு வளர்ந்த