பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் – ஒரு நாகரிகம்

97


மங்கையர்க்கரசியாருக்கு ஆற்றொனாத் துன்பம். ஆயினும், இருவரும் கடமைகளின் வழி நின்றவர்கள். மாறுபாடுகள் கருதிக் கடமைகளைத் துறப்பவர் பண்பாடுடையவராகக் கருதப்பெறமாட்டார்கள். கடமைகளின், களத்தில் காலூன்றி நிற்பதன் மூலமே மாறுபாடுகளையும் கூடக் காலப் போக்கில் தவிர்க்க இயலும். இந்நெறியையே குலச்சிறை நாயனார் மேற்கொண்டொழுகினார். ஆன்றவிந்தடங்கிய அமைச்சர் அல்லவா? மங்கையர்க்கரசியாருடைய திருவுள்ளக் கருத்தைக் குலச்சிறை நாயனாரின் அமைச்சுத் திறன் முடித்து வைக்கிறது.

திருஞானசம்பந்தரை அழைத்தல்

இதே காலத்தில் தமிழ் நாட்டில் இரண்டு ஞானத் தலைவர்கள் அவதரித்தருளி திருநெறிய தமிழை வளர்த்து வருகின்றனர். அவருள் திருநெறிய திருத்தொண்டின் நெறிக் காவலராக விளங்கியவர் தமிழாளியர் திருநாவுக்கரசர். மற்றொருவர் ஞாலமுய்ய சைவநன்னெறியின் சீலமுய்ய எழுந்தருளிய தமிழ்ஞான சம்பந்தர். இந்த இரண்டு ஞானத்தலைவர்கள் இந்த மண்ணில் நடந்ததால் தமிழ்நாடு எழுச்சியுற்றது; மறுமலர்ச்சி பெற்றது! எங்கும் தமிழ் முழக்கம்! சைவ சமய இயக்கம்! சமுதாய மாற்றங்கள் நிகழ்ந்தன! திருஞானசம்பந்தர் திருமறைக் காட்டில் எழுந்தருளி யிருந்தார். பாண்டிய நாட்டுக்கு நேர்ந்துள்ள இடரினை நீக்கி உய்யும் நெறி காட்டும்படி திருஞான சம்பந்தரை அழைக்க அமைச்சர் குலச்சிறை நாயனாரும் அரசி மங்கையர்க் கரசியாரும் ஒரு சேர எண்ணினர். திருஞான சம்பந்தரைப் பாண்டிய நாட்டுக்கு அழைக்கத் துதுவர்கள் செல்கின்றனர். திருஞான சம்பந்தரும் இவர்களின் அழைப்பை ஏற்றுக் கொண்டு பாண்டிய நாட்டுக்கு எழுந்தருளுகின்றார். திருஞான சம்பந்தரைப் பாண்டிய நாட்டின் தலைநகராகிய மதுரை நகரின் எல்லையில் குலச்சிறை நாயனார் எதிர்