பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் விழாவில் தலைமை உரை

115



இந்தப் பாடல் சைவ நெறியின் தத்துவம் முழுதையும் ஒருங்கே விளக்கும் திருப்பாடல். இத்திருப்பாடல் சாக்கிய நாயனார் வரலாற்றில் வருகிறது. திருச் சங்க மங்கையில் வேளாளர் ஒருவர் இருந்தார். அவர் எல்லா உயிர்களிடத்தும் அருள் காட்டியவர். நன்னெறியில் நின்று ஒழுகியவர் அவர் பிறவித் துன்பத்தை நீக்கிக் கொள்ளும் ஆவலில் தத்துவ விசாரம் செய்யத் தொடங்கினார். இதற்காகக் காஞ்சிபுரம் சென்றார். அங்கிருந்த பெளத்த சமயத்தாருடன் பழகி பெளத்தத்திலே சேர்ந்தார். பெளத்தத்தை ஆராய்ந்தார். தெளிவு கிடைத்தபாடில்லை! பின் சைவ நூல்களைக் கற்கலானார்; அதன் பயனாகத் தெளிவு கண்டார். சைவ நெறியில் பொது வகையால் மூன்றும் சிறப்பு வகையால் நான்கு பொருள்களும் உண்டு. பொதுவகை மூன்றாவன உயிர், தளை, இறை. உயிர்-ஆன்மா-பல! அவை பிறப்பும் இறப்பு மற்றவை. உயிர்கள் துய்த்து அனுபவிக்கும் இயல்பின. உயிர், அறிவித்தால் அறியும் அறிவுப் பொருள் உயிர், இயல்பாக ஆணவத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆன வத்தின் ஆற்றலுக்கு உயிர் அடங்கும் பொழுது உலகைத் துய்த்து மகிழும். கடவுள்-தலைவன். உயிர்களுக்கு அறிகருவி களையும் செய்கருவிகளையும் துய்த்து மகிழ்வதற்குரிய உலகையும் படைத்துத் தருபவன்! உயிர், ஆணவத்தின் சார்பில் உலகைத் துய்க்கும் பொழுது துணையாக இருந்து பொன்னும் பொருளும் போகமும் வழங்கி, துய்ப்பு வழித் துறவும் பெறச் செய்து இன்பு அன்பில் நிலைத்து நிற்கச் செய்பவன்.

இப்பாடலில்,


செய்வான்-ஆன்மா

செய்வினை-ஆன்மா செய்யும் நல்வினை, தீவினை

வினையின் பயன்-நல்வினையால் இன்பம்
தீவினையால்துன்பம்