பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அம்மேகத்தைக் கிழித்து இடையீடின்றி அன் பயணத்தைத் தொடர்கிறது: சூல் மேகம் கிழிக்கப் பெற்றதால் மழை பொழிகிறது! பெருமழையாதலால் அருவி கிழிந்து ஓடி வருகிறது! குளிரும் கூட இருக்கிறது: சூல் முற்றிய மேகம் மலர் செழிக்க மழை பொழிவது போல ஐம்புலன்களிலும் அன்பினால் செழித்த ஆன்மா இறைவனை அவாவி நிற்கிறது! அதற்கு ஆன்மாவே இறைவன் உவந்து குடிபுகும் திருக்கோயில். அன்பில் திளைத்தாடும் இடமாகும். இறைவன் ஊனுக்கும் உயிருக்கும் ஆக்கம் சேர்க்கும் அன்னையோடு எழுந்தருளியுள்ள திருநகரம் திருக்கொடுங் குன்றம் என்று பாடுகின்றார் திருஞான சம்பந்தர்.

"வானிற்பொலி வெய்தும்மழை மேகம்கிழித் தோடிக்
கூனற்பிறை சேரும்குளிர் சாரற்கொடுங் குன்றம்
ஆணிற்பொலி ஐந்தும்அமர்ந் தாடியுல கேத்தத்
தேனிற்பொவி மொழியாளொடு மேயான் திருநகரே"


(திமுறை 1-14-1)


என்பது திருப்பாடல்.

பிறைநிலா மேகத்தைக் கிழித்தோடுகிறது. ஆன்மாவின் ஞானம் ஆணவப்படலத்தைக் கிழிந்தோடித் திருவருட் புயலைத் தருகிறது. பிறைநிலா மலையின் முகடு சேர்கிறது! ஆன்மா. வாழ்க்கையின் முகடாகிய இறைவன் திருவடியைச் சேர்கிறது. மலை, தண்சாரற் குன்று! இறைவன் திருவடி, தண்ணளி மிக்கது! இங்கனம் இயற்கையை வியந்து பாராட்டுவது தமிழ் மரபு: திமுறைவழக்கு! ஆங்கிலக் கவிஞர்கள் இயற்கையை வியந்து பாராட்டுவதற்கும் திருமறை வழக்கிற்கும் வேறுபாடு உண்டு. அவர்கள் இயற்கையே இறை என்று போற்றுபவர். திருமுறைகள் ஒரோ வழி இயற்கை இறை என்று

"வாச மலரெலாம் ஆனால் நீயே"
"முரி முழங்கொலி நீர் ஆனான் கண்டாய்”