பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்துரதாய் கோத்தும்பீ!


(திரவாசகம்-232)


இத்திருப்பாடல் அம்மையப்பன், ஒருபகுதி அம்மையாகவும் ஒரு பகுதி அப்பனாகவும் விளங்குவதை விளக்கும் பாடல். இன்றைய வழக்கில் இத்திருவுருவத்தை அர்த்த நாரீசுவரர் என்பர். "அம்மையப்பரே உலகுக்கு அம்மை யப்பர்” என்று சித்தாந்தச் சாத்திர நூல்களில் தொன்மை யதாகிய திருக்களிற்றுப்படியார் பேசும். அவன் என்று ஆண்பாலையும் அவள் என்று பெண்பாலையும் கட்டடுவது தமிழிலக்கண மரபு. குமர குருபரர் சிந்திக்கிறார். அம்மையப்பன் திருவுருவத்தைச் சிந்திக்கிறார். சிந்தனையில் முகிழ்க்கிறது தெளிவு.

"ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருவொன் றால்அவ்
உருவையிஃ தொருத்தன் என்கோ ஒருத்தி என்கோ
இருவருக்கும் உரித்தாக ஒருவர் என்றோர்
இயற்சொல்இல தெனின்யான்மற்
றென்சொல் கேனே!

(சிதம்பரச் செய்யுட் கோவை-54) என்று பாடுகிறார்.


அவருக்கு ஒருவர் என்ற சொல் கிடைத்தது. இறைவன் அம்மையோடு உடனிருக்கின்ற பொழுதே அருள் செய்கின்றான். அதனால் இறைவனுடைய - திருவருட் செயற்பாடு நிகழ்ந்த பொழுதெல்லாம் அம்மையப்பன் திருமேனியே போற்றப்படுகிறது. இன்றைய திருக்கோயில்களில் கூட இறைவனின் திருவருட் செயல் வெளிப்பட்ட இடங்களில் எல்லாம் கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்குப் பின்னால் அம்மையப்பன் திருமேனி எழுந்தருளச் செய்திருப்பதைக் காணலாம்.