பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் விழாவில் தலைமை உரை

127


திருமணம் செய்து வைத்தனன், சேக்கிழார் காப்பியத்தில் வரும் அடியார்களில் பெரும்பாலோர் மனையறத்தில் வாழ்ந்தவர்கள். சிவபெருமான் மண்ணுக்கு வந்த பொழுதெல்லாம் சிறந்த மனையறம் நிகழ்ந்த இல்லங்களுக்கு எழுந்தருளி அவர்களுடைய அன்பினில் மகிழ்ந்து, கலந்து உறவாடி அருள் செய்துள்ளான். காதல் மனை வாழ்க்கையில் பிரிவு ஏற்பட்டபொழுது அந்தப் பிரிவினைத் தானே முன்னின்று சேர்த்து வைத்துள்ளான். திருநீலகண்டர் வரலாறும், சுந்தரர் வரலாறும் இதற்குச் சான்று. மனையறத்தில் நிகழும் வாழ்க்கை சமயச் சார்பில்லாதது; தவமன்று; அவம் என்ற அயல் வழக்கின் கருத்தைச் சேக்கிழார் சுந்தரர் வரலாற்றில் நயம்பட மறுத்துச் செழுந்தமிழ் வழக்கிற்கு அரண் செய்கிறார். ஏன்? இறைவனின் புகழை, அவனுடைய புகழில் தோய்ந்த அடியார்களைப் போற்றுவதற்காகக் காப்பியம் செய்த சேக்கிழார் காதலையும் பாடுகிறார். காதலைப் பாடுவது மட்டுமல்ல. காதலைக் கடவுள் தன்மையுடது என்றும் பாராட்டுகிறார். சுந்தரர்-பரவையார் காதல் பற்றி விளக்கும் சேக்கிழாரின் பாடல்கள் காலத்தை வென்று விளங்கம் புகழ் மிக்கவை.

திருவாரூரில் சுந்தரர் பரவையாரைச் சந்திக்கிறார். சுந்தர் பரவையாரைக் கண்டு காதல் கொண்டு அதிசயித்த நிலையைச் சேக்கிழார்,

"கற்பகத்தின் பூங்கொம்போ?காமன்தன் பெருவாழ்வோ?
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ? புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதியூத்த விரைக்கொடியோ?
அற்புதமோ? சிவனருளோ? அறியேன்என் றதிசயித்தார்"!


(தடுத்தாட்கொண்ட புராணம்-140)