பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உ

குருபாதம் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம்

26ஆவது குருமகாசந்நிதானம்
சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கியருளிய ஆசியுரை.

தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாந்திருத்தொண்டத் தொகைஅடியார்பதம்போற்றி
ஒல்லையவர் புராணகதை உலகரிய விரித்துரைத்த
செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழார் அடிபோற்றி.

-உமாபதி சிவாசாரியார்.

நாயனார்:

சுந்தரர் அருளிய திருத்தொண்டத்தொகையும், நம்பி யாண்டார் நம்பிகள் அருளிய அதன் வகையாகிய திருத்தொண்டர் திருஅந்தாதியும். சேக்கிழார் அருளிய அதன் விரிவாகிய திருத்தொண்டர் புராணமும் தென்தமிழ்ப் பயனாகத் தமிழர்கட்குக் கிடைத்த பெறுதற் கரிய பெருஞ் செல்வமாகும்.

குரு, லிங்க, சங்கமம் என்னும் முத்திற வழிபாடு சைவத்தின் தனிச் சிறப்பாகும். குரு இறைவனை அடைய வழிகாட்டுபவர். இலிங்கம் வழிபடுவோர்க்கு வளம் வழங்குபவர். சங்கமம் குரு காட்டும் வழியில் சென்று வழிபட்டு வளம் பெறுவோராவர். இத்தகு சைவ நெறியில் தமிழ்நாட்டில் வாழ்ந்து வழிகாட்டியவர்களே நாயன்மார்கள். நாயனார் என்ற சொல் இறைவனைக் குறிப்பது. நாய் என்பது உயிரைக் குறிப்பது. நாயன் என்பது அவ்வுயிரை அடிமையாக உடைய இறைவனைக் குறிப்பது. உயிர்கள் பல, இறைவன் ஒருவனே. நாய்களை அடிமையாக உடையவன் நாயனார்.