பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/148

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முனைப்பு கால்கொள்கிறது. பெருமான், ஆளுடைய பிள்ளையின் ஐயத்தினைத் தீர்ந்து வைக்கிறான். அந்த ஐயத்தினைப் பெருமான் தீர்த்து வைத்துச் சொன்ன உரை அன்றும் இன்றும் என்றும் நம்மனோர்க்கு உய்யும் நெறியாகும்.

புனிதப் பேரவை விளங்கி வெல்க

பேச்சு, தொண்டாகாது; கைத்திருத்தொண்டு செய்ய வேண்டும். அப்பரடிகள் கைத்திருத்தொண்டு செய்தது உழ வாரப்படைப்பணி. அதனால் வாசியில்லாக்காசு. அம்மையின் சிவஞானப்பாலுண்ட திருஞானசம்பந்தருக்கே கைத்திருத் தொண்டின்மையின் வாசியுடைய காசு வழங்கப் பட்ட தென்றால் நம்மனோர் நிலையென்ன? போதும் பேச்சு? திருத்தொண்டு செய்வோமாக! அதுபோலவே சுந்தரருக்கும். ஏயர்கோன் கலிக்காம நாயனார் சினம் கொள்கிறார். இதனையும் பெருமானே சமாதான்ம் செய்துவைத்து ஆரூரரையும் ஏயர்கோன் கலிக்காம நாயனாரையும் இணைத்து வைக்கிறார். திருவாரூர் தேவாசிரிய மண்டபத்தில் அடியார்கள் விறன்மிண்டர் தலைமையில் இருக்கின்றனர். ஆரூரரை வழிபடும் வேட்கை மிகுதியால் நம்பியாரூரர் தேவாசிரிய மண்டபத்து அடியார்களுக்கு வணக்கம் செய்யாமல் சென்று விடுகிறார். தேவாசிரிய மண்டபத்திலிருந்த அடியார்களுக்கு ஆற்றொனாச்சினம் தோன்றுகிறது. நம்பியாரூரர் புறமானவர் என்று ஒதுக்குகின்றனர். ஆருரீசன் நம்பியாரூரருக்கு இந்நிலை உணர்த்தி "அடியவர்க்கு வணக்கம் செய்க" என்று ஆற்றுப்படுத்துகிறார். அந்தச் சூழ்நிலையில் பிறந்ததுதான் சேக்கிழார் காப்பியத்துக்கு முதல் நூலாக விளங்கும் திருத்தொண்டத்தொகை அதனால் சேக்கிழார் தமது நூலின் குறிக்கோள்களை எடுத்துக் கூறும் பொழுது சைவ அடியார்கள் திருக்கூட்டம் அடங்கிய "புனிதர்பேரவை" என்றும் நின்றும் நிலவ வேண்டும் என்று பாடுகிறார்.